யார் என்ன சதி செய்தாலும் 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும்: முதல்வர் ஸ்டாலின்

92


தர்மபுரி: யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை நம் மீது பரப்பினாலும், 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தர்மபுரியில் திமுக எம்பி மணி இல்லத் திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நேற்றைய தினம் மிக முக்கியமான, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை, சென்னையில் நடத்தி முடித்துவிட்டு இங்கு வந்திருக்கிறோம். முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அது என்ன என்று உங்களுக்கு தெரியும். அடுத்தாண்டு நாம் எதிர் கொள்ள இருக்கும் தேர்தலை அடிப்படையாக வைத்து, சீராய்வு என்ற பெயரில் ஒரு தீய செயலை, சதி செயலை செய்ய தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருக்கிறது. அதனை தடுப்பதற்காக, அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசி, தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.

தந்திரம்



அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என பேசினர். அதற்கு உரிய அவகாசம் கொடுக்க வேண்டும். பதற்றம் இல்லாத சூழலில் தான் அதனை செய்ய வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் சூழலில், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது உண்மையான வாக்காளர்களை நீக்க தந்திரம்.



இதனை தான் பீஹார் மாநிலத்தில் செய்தார்கள். இப்பொழுது மற்ற மாநிலங்களில் செய்ய முயற்சி செய்கின்றனர். நாம் நடத்திய கூட்டத்தில் கூட இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும், அதிமுக பங்கேற்கவில்லை. இரு கட்சிகள் பங்கேற்கவில்லை; தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அதற்காக நான் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

இரட்டை வேடம்



எதிர்க்கட்சி தலைவராக இருக்க கூடிய, பழனிசாமி இதில் கூட இரட்டை வேடத்தை காட்டி இருக்கிறார். பாஜவுக்கு பயந்து தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார். அதேநேரத்தில் அவர் அதிமுக தொண்டர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.


தேர்தல் கமிஷனின் நடவடிக்கையில் பழனிசாமிக்கு சந்தேகம் இருப்பதை காட்டுகிறது. ஆனால் அவரால் வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. தான் பாஜவின் பாதம் தாங்கி என்பதை நொடிக்கு ஒருமுறை அவர் நிரூபிக்கிறார். நான் உறுதியாக சொல்கிறேன், பாஜ எப்படிப்பட்ட சதி செயலை செய்தாலும் தமிழகத்தில் எதையும் செய்ய முடியாது.

திமுக 2.0 ஆட்சி



யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை நம் மீது பரப்பினாலும், திமுக தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி, 2026ல் மீண்டும் நிச்சயம் அமையும். அன்றைக்கு எல்லா டிவி சேனல்களிலும் திமுக 2.0 ஆட்சி அமைந்தது என்ற செய்தி தான் வரப்போகிறது. அதனை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள். தமிழக மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இதனை பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன்.


7வது முறையாக திமுக ஆட்சி அமைய நீங்கள் எல்லோரும் உறுதுணையாக இருக்க வேண்டும். 2021ல் தமிழகத்தை அதிமுகவிடம் இருந்து மீட்டு இருக்கிறோம். 2026 தேர்தல் பாஜ.,- அதிமுகவிடம் இருந்து பாதுகாக்க கூடியதாக அமைய போகிறது. மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். தமிழ் உணர்வை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement