வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரை: காங்., கோபம்

23


புதுடில்லி: காங்கிரஸ் தலைமையின் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் அக்கட்சி எம்பி சசிதரூர், வாரிசு அரசியலை விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் கோபம் அடைந்த நிலையில், சசி தரூர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பாஜ அறிவுறுத்தி உள்ளது.

மோதல்



திருவனந்தபுரம் தொகுதியில் தொடர்ந்து 4 முறை எம்பியாக இருந்து வருபவர் சசி தரூர். அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் கார்கேயை எதிர்த்து போட்டியிட்டார். இதனால் அவர் மீது காங்கிரஸ் தலைவர்கள் கோபத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை பாராட்டி பேசியிருந்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு அரசின் நடவடிக்கையை ஆதரித்த அவரின் கருத்துகள் கட்சியில் மோதலை அதிகரித்தது. காங்கிரஸ் நிர்வாகிகள் வெளிப்படையாகவே சசிதரூரை விமர்சிக்க துவங்கினர். காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி வெளிநாடுகளுக்கு செல்லும் எம்பிக்கள் குழுவில் சசிதரூரை மத்திய அரசு நியமித்து இருந்தது.

விமர்சனம்



இந்நிலையில் அடுத்தபடியாக வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் நாளிதழில் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் வாரிசு அரசியலை ஈடுபட்டு வருகிறது. அக்கட்சி மூத்த தலைவர் சோனியா, மகன் ராகுலை பிரதமராக்க முயற்சித்து வருகின்றார் என பாஜ தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திறன் இல்லாதவர்கள்



அந்தக் கட்டுரையில் சசி தரூர் எழுதியதாவது: இந்திய ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அரசியல் அதிகாரம் என்பது திறன்,உறுதிப்பாடு அல்லது அடிமட்டத்தில் இருந்து தொடர்புகளுக்கு மாறாக பரம்பரை முறையில் தீர்மானிக்கப்படும் போது நிர்வாகம் பாதிக்கப்படும். குறைந்தளவிலான திறமையாளர் குழுவில் இருந்து தேர்வு செய்வது ஒரு போதும் சாதகமாக இருக்காது. ஆனால், வேட்பாளர்களின் தகுதி அவர்களின் குடும்பப் பெயராக மாறும் போது, அது மிகவும் சிக்கலானது. உண்மையில், சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து, வாரிசு அரசியலில் இருந்து வந்தவர்கள், தனிமைபடுத்தப்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் தங்களின் தொகுதி மக்களின் தேவைகளுக்கு திறம்பட பதிலளிக்க போதுமான திறன் இல்லாதவர்களாக உள்ளனர். மோசமான செயல்பாடுகளுக்கு அவர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


வாரிசு அரசியலில் இருந்து, தகுதியுடையவர்களின் ஆட்சியாக மாற்றுவதற்கன நேரம் இது.
இதற்கு சட்டப்பூர்வமான குறிப்பிட்ட காலவரம்பு முதல் அர்த்தமுள்ள உட்கட்சி தேர்தலுடன், தகுதி அடிப்படையில் தலைவர்களை தேர்வு செய்ய வாக்காளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வரையிலான அடிப்ப்படை மாற்றங்கள் தேவைப்படும். இந்திய அரசியல் ஒரு குடும்ப நிறுவனமாக இருக்கும் வரை, ஜனநாயகத்தின் உண்மையான வாக்குறுதியான, ' மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் அரசு என்பதை முழுமையாக உணர முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாஜ செய்துள்ளதா



காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி கூறியதாவது: தலைமைப்பதவி என்பது எப்போதும் தகுதி அடிப்படையில் வரும். நாட்டின் மிகவும் திறமைவாய்ந்த பிரதமராக நேரு இருந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா, வாழ்க்கையை அர்ப்பணித்து தனது திறமையை நிரூபித்தார். ராஜிவும், தனது வாழ்க்கையை தியாகம் செய்து நாட்டிற்கு சேவையாற்றினார். நேரு குடும்பத்தினரை வாரிசு அரசியல்வாதி என யாராவது ஒருவர் விமர்சித்தால், இந்தியாவில் மற்ற குடும்பத்தினர் செய்த தியாகம் அர்ப்பணிப்பு என்ன? பாஜ செய்துள்ளதா? இவ்வாறு அவர் கூறினார்.

பழிவாங்கும்



இது தொடர்பாக பாஜவின் ஷெசாத் பூனவல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சசி தரூர் ஆபத்தான வீரராக மாறியுள்ளார். அவர் நேரடியாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2017 ல் ராகுலை நான் ' நெப்போ நாம்தார்' என விமர்சித்த போது எனக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன். காங்கிரஸ் முதல் குடும்பத்தினர் பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement