தி.மு.க.,வில் மனோஜ் பாண்டியன் ஐக்கியம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவரும், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான மனோஜ் பாண்டியன், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தி.மு.க.,வில் இணைந்தார்; தன் எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தார்.
தி.மு.க.,வுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன்.
இவர், கடந்த 30 ஆண்டுகளாக அ.தி.மு.க.,வில் எம்.பி., - எம்.எல்.ஏ., என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டபோது, பன்னீர்செல்வம் பக்கம் சென்றார்; அ.தி.மு.க., ஒருங்கிணைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
ஆனால், 'அதற்கான வாய்ப்பே இல்லை' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உறுதிபட தெரிவித்துவிட்ட நிலையில், பன்னீர்செல்வம் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருப்பதால், அவரோடு சேர்ந்து செயல்பட்ட மனோஜ் பாண்டியன், நேற்று காலை அறிவாலயம் சென்று, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
பின், மனோஜ் பாண்டியன் அளித்த பேட்டி:
திராவிட கொள்கைகளை பாதுகாக்கும் தி.மு.க., தலைமையை ஏற்று, அக்கட்சியின் தொண்டராக பணியாற்ற தி.மு.க.,வில் இணைந்துள்ளேன்.
எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எந்த கட்சிக்கும் அ.தி.மு.க.,வை அடகு வைக்கவில்லை; அவர்கள் காலத்து அ.தி.மு.க., இன்று இல்லை. எம்.ஜி.ஆர்., உருவாக்கிய விதிகளை காற்றில் பறக்கவிட்டு, பா.ஜ.,வின் கிளை கழகமாக அ.தி.மு.க., மாறி விட்டது.
உழைக்கும் தொண்டர்கள் எவரையும் மதிக்காத தலைமையாக பழனிசாமி உள்ளார்.
ஆனால், மாற்றுக் கட்சிக்காரர் என்றுகூட பார்க்காமல், முதல்வர் ஸ்டாலின் என்னை வரவேற்றார். அது தான் தலைமைக்கான பண்பு.
'பா.ஜ.,வுடன் எந்த சூழலிலும் கூட்டணி வைக்க மாட்டேன்' என கூறிவிட்டு, எந்த அடிப்படையில் மீண்டும் பா.ஜ.,வுடன் பழனிசாமி கூட்டணி வைத்தார் என்பதற்கு, எந்த பதிலும் இல்லை. தன்னையும், குடும்பத்தையும் காப்பாற்றவே, பழனிசாமி அ.தி.மு.க.,வை அடகு வைத்துள்ளார்.
எனவே, திராவிட இயக்க கொள்கைகளை பாதுகாக்கும் ஒரு உன்னத தலைவன் கீழ் செயல்பட விரும்பி, தி.மு.க.,வில் இணைந்து விட்டேன்.
இவ்வாறு மனோஜ் பாண்டியன் கூறினார்.
நேற்று மாலை தன் எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வழங்கினார். இவரது ராஜினாமாவால், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளது.
மேலும்
-
அரசியல் காழ்ப்புணர்ச்சி, குறுகிய மனதுடன் குற்றம் சாட்டினார்; முதல்வர் மீது விஜய் குற்றச்சாட்டு
-
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
-
ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருட்டு: ராகுல் குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் வெடித்து சிதறிய சரக்கு விமானம்: 7 பேர் பலி; 11 பேர் காயம்
-
கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
-
அமெரிக்க பொருட்கள் மீதான 24% வரிவிதிப்பு நிறுத்தம்: சீனா அறிவிப்பு