தி.மு.க எம்.எல்.ஏ., மருத்துவமனையை காப்பாற்ற சூழ்ச்சி: பழனிசாமி


சென்னை: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மோசடி வழக்கிலிருந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் மருத்துவமனையை காப்பாற்ற சூழ்ச்சி நடப்பதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



தமிழகத்தில் போலி ஆவணங்கள் வாயிலாக, சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபட்டதாக, இரண்டு தனியார் மருத்துவமனைகளில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை, தி.மு.க., அரசு ரத்து செய்தது.

அதில் ஒரு மருத்துவமனை, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமானது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள், முறையாக வாதிடவில்லை. இதனால், உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த உத்தரவை காரணம் காட்டி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான மருத்துவமனை நிர்வாகமும், உயர் நீதிமன்றம் வாயிலாக தப்பித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

தன் கட்சிக்காரரின் மருத்துவமனையை தப்பிக்க வைக்க, தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி, சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க., அரசை கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement