பொருளாதார பலத்தால் சொந்தக் காலில் நிற்கும் இந்தியா: மத்திய நிதியமைச்சர் பெருமிதம்
புதுடில்லி: '' பொருளாதாரம் காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
டில்லி பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் இந்தியா வேகமாக முன்னேறும் காலத்தில் நாம் இருக்கிறோம். இந்தியா அதன் மக்கள் தொகை மற்றும் அதன் புவியியல் ரீதியில் அமைப்பக்காக முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், இந்தியா ஒன்றாக இருக்கிறது. பொருளாதார பலம் காரணமாக இந்தியா தனித்து சொந்தக்காலில் உயர்ந்து நிற்கிறது. இந்தியாவை மையப்படுத்திய கொள்கை மற்றும் கொள்கை திட்டமிடலையும் நாம் அதிகரிக்க வேண்டும். மற்றும் வளரும் பொருளாதாரத்துக்கான மாடலை உருவாக்க வேண்டும். வறுமையில் இருந்து 2.5 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர். விரைவில் இந்தியா உலகின் மிகப்பெரிய 3வது பொருளாதார நாடாக மாறும்.
2014 ல் உலகின் 10வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா இன்று 5வது இடத்தில் இருக்கிறது. அடுத்து 4வது இடத்துக்கும், விரைவில் 3வது இடத்துக்கும் வரப்போகிறது. இது தான் இந்தியாவை எழுச்சி பெறச் செய்கிறது.
நாம் அனைவரும் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நமது பொருளாதாரம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பொருளாதாரத்துக்கு பங்களிப்பு அளிக்கும் இந்தியர்கள் என்ற முறையில் நமது முயற்சிகள் மூலம் நமது இலக்குகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை வைக்க வேண்டும்.
நமது பொருளாதாரம் சரியான பாதையில் இல்லை என சொல்பவர்களை நம்பி நாம் அடிபணியக்கூடாது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டை எப்படி இறந்த பொருளாதாரம் எனச் சொல்ல முடியும். வெளியில் இருந்து வருபவர்கள் நம்மை கிண்டல் செய்வார்கள். ஆனால், நாட்டிற்குள் இருக்கும் நாம் எப்போதும் நமது சொந்த முயற்சிகளையும், சாதனைகளையும் ஒரு போதும் குறை சொல்லக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
ஆமாம் ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டு பணக்காரர்களுக்கு சாதகமாக எப்படி இருப்பது என்று உலகிற்கு காட்டுகிறீர்கள்.
டாஸ்மாக் சொம்புகளுக்கு மட்டும் ஒண்ணுமே மண்டையில் ஏறாது