ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்... * கேப்டன் ஹர்மன்பிரீத் பெருமிதம்

நவி மும்பை: ''கனவு காண்பதை எப்போதும் நிறுத்தாதீர்கள். என் குழந்தைப் பருவ உலக கோப்பை கனவு இப்போது தான் நனவாகியுள்ளது,''என கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்தார்.
நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை பைனலில் (50 ஓவர்) இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36, முக்கிய காரணம். இவரது தந்தை ஹர்மந்தர் சிங் புல்லாருக்கு கிரிக்கெட், கால்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தது. பின் பஞ்சாப்பின் மோகா நகர கோர்ட்டில், கிளார்க் பணியில் 'செட்டில்' ஆனார். தந்தை பயிற்சி அளிக்க, இளம் வயதிலேயே ஹர்மன்பிரீத், கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். தற்போது 'உலகை' வென்று உச்சம் தொட்டுள்ளார்.
தனது இனிய பயணம் குறித்து ஹர்மன்பிரீத் கவுர் கூறியது:
குழந்தையாக இருக்கும் போதே என் தந்தையின் பெரிய பேட் எடுத்து விளையாடுவேன். இதை பார்த்த அவர், பேட்டை செதுக்கி, சிறிதாக மாற்றிக் கொடுத்தார். 'டிவி'யில் இந்திய அணி விளையாடும் போது அல்லது உலக கோப்பை போட்டியை பார்க்கும் போது எனக்கும் இது போன்ற வாய்ப்பு கிடைக்குமா என எண்ணியுள்ளேன். அப்போது பெண்கள் கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது. இந்திய அணியின் நீல நிற 'ஜெர்சி'யை எப்போது அணிவேன் என கனவு கண்டேன். கிரிக்கெட் பற்றி அதிகம் அறியாத ஒருவர், நம் நாட்டின் பெண்கள் கிரிக்கெட்டில் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கனவு கண்டது பெரிய விஷயமல்லவா. நாம் எப்போதும் கனவு காண்பதை நிறுத்தக்கூடாது. விதி உங்களை எங்கு அழைத்து செல்லும் என தெரியாது. என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்றெல்லாம் நினைக்காதீர்கள். நடக்கும் என்று மட்டும் நம்புங்கள். எனது தன்னம்பிக்கை தான் உலக கோப்பை வெல்ல உதவியது.
ரசிகர்கள் உத்வேகம்
கடந்த 2017ல் லார்ட்சில் நடந்த உலக கோப்பை பைனலில் இந்திய அணி, இங்கிலாந்திடம் 9 ரன்னில் தோற்ற போது எங்களது நெஞ்சம் தகர்ந்தது. போட்டி எங்களது கட்டுப்பாட்டில் தான் பெரும்பாலும் இருந்தது. எப்படி தோற்றோம் என்றே புரியவில்லை. சோகத்துடன் நாடு திரும்பிய எங்களுக்கு, இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது எங்களுக்கு உத்வேகம் அளித்தது. நாட்டுக்காக பெண்கள் கிரிக்கெட் அணியினர் ஏதாவது 'ஸ்பெஷல்' சாதனை நிகழ்த்த வேண்டுமென ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்த்தது. ஒவ்வொரு ரசிகரும் அந்த தருணத்துக்காக காத்திருந்தனர். ஒவ்வொருவரின் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் கைகொடுக்க, நாங்கள் இம்முறை வெற்றி எல்லையை தொட்டோம். மைதானத்தில் நாங்கள் மட்டும் விளையாடவில்லை. அரங்கில் இருந்த ரசிகர்கள், 'டிவி'யில் எங்கள் ஆட்டத்தை பார்த்தவர்கள் என அனைவரும் சேர்ந்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.
கடவுள் கருணை
தனிப்பட்ட முறையில் உலக கோப்பை வென்ற தருணம் மிகவும் உணர்ச்சிகரமானது. கிரிக்கெட் விளையாட துவங்கிய நாளில் இருந்து உலக கோப்பை வெல்வதே கனவாக இருந்தது. அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தால், கோப்பையை 'மிஸ்' செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனது பிரார்த்தனைகளை கடவுள் ஒவ்வொன்றாக கேட்டார். தற்போது 'மேஜிக்' நடந்தது போல உள்ளது. இப்போது நாங்கள் உலக சாம்பியன்கள். மிகவும் 'ரிலாக்சாக'வும் பணிவாகவும் உணர்கிறேன். எங்களது நீண்ட கால கனவை நனவாக்கிய கடவுளுக்கு நன்றி.
இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.

'நம்பர்' ராசி
தோனியின் ரசிகையான ஹர்மன்பிரீத் கவுர் ஆரம்பத்தில் 7ம் 'நம்பர்' பொறித்த ஜெர்சி அணிந்திருந்தார். கேப்டனாக 'டி-20' உலக கோப்பை பைனல் (எதிர், ஆஸி., மெல்போர்ன், 2020), காமன்வெல்த் விளையாட்டு பைனலில் (எதிர், ஆஸி., பர்மிங்ஹாம், 2022) சாதிக்க முடியவில்லை. 2024ல் எண் கணித ஜோதிடப்படி 23ம் நம்பருக்கு மாறினார். 23ம் நம்பர் ராசி கைகொடுக்க, 2025ல் பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் மும்பை அணிக்கு கோப்பை பெற்று தந்தார். தற்போது இந்திய அணிக்காக உலக கோப்பை வென்று வரலாறு படைத்துள்ளார்.

பிரதமர் மோடி உடன்...
உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளை பிரதமர் மோடி நேரில் சந்திக்க உள்ளார். இன்று மாலை அவரது டில்லி வீட்டில் பாராட்டு விழா நடக்க உள்ளது. இதற்காக ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட இந்திய அணியினர், மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று டில்லி வந்தனர்.

Advertisement