அச்சுறுத்தும் அபிஷேக் சர்மா * ஆஸ்திரேலிய வீரர் புலம்பல்

2

கான்பெரா: ''பேட்டிங்கில் அபிஷேக் சர்மா அச்சுறுத்துகிறார்,'' என குனேமன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. அடுத்த இரு போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது போட்டி நாளை கான்பெராவில் நடக்க உள்ளது.
இத்தொடரில் இந்திய அணி துவக்க வீரர் அபிஷேக் சர்மா, முதல் 3 போட்டியில் 112 ரன் எடுத்து, இத்தொடரில் அதிக ரன் எடுத்த இரு அணி வீரர்களில் 'நம்பர்-1' ஆக உள்ளார்.
இவர் குறித்து ஆஸ்திரேலிய அணி சுழற்பந்து வீச்சாளர் குனேமன் கூறியது:
இந்திய அணி துவக்க வீரர் அபிஷேக் சர்மா, எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் தருகிறார். அதிரடியாக பேட் செய்கிறார். நாளைய போட்டியிலும் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் யாராவது ஒருவர், முதல் சில ஓவர்களில் அபிஷேக் விக்கெட்டை கைப்பற்றுவர் என நம்புகிறேன்.
ஏனெனில் அபிஷேக் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடுகிறார். சில ஓவர்கள் பேட்டிங் செய்தால் கூட, போட்டியை அவர்களுக்கு சாதகமாக மாற்றி விடும் திறமை கொண்டவர்.
இந்திய அணியினர் எங்களைப் போலவே துணிச்சலாக விளையாடுகின்றனர். நான்காவது போட்டிக்கான மைதான அளவு சிறியது என்பதால் அதிக ரன் எடுக்கப்படலாம். இரு அணி தரப்பிலும் 'மிடில் ஆர்டரில்' விக்கெட் சரிவதைப் பொறுத்து போட்டியின் முடிவு மாறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement