கர்நாடகாவில் தீவிரமடைகிறது கரும்பு விவசாயிகள் போராட்டம்

2

பெலகாவி: கரும்பு டன்னுக்கு, 3,500 ரூபாய் ஆதரவு விலையாக நிர்ணயிக்க கோரி, மாநில காங்., அரசுக்கு எதிராக, கர்நாடகாவின் பெலகாவியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி அமைந்துள்ளது. வட மாவட்டமான பாகல்கோட், பெலகாவியில் அதிக அளவில் கரும்புகள் பயிரிடப்படுகின்றன. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை வினியோகம் செய்யும் விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலைகள் உரிய பணம் கொடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு ப ல ஆண்டுகளாக உள்ளது.

இந்நிலையில், 'ஒரு டன் கரும்புக்கு, 3,500 ரூபாயை ஆதரவு விலையாக அரசு நிர்ணயிக்க வேண்டும்' என்று, பெலகாவி மாவட்ட விவசாயிகள் சில மாதங்களாக கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை மாநில காங்., அரசு பரிசீலிக்கவில்லை.

இதனால் அரசைக் கண்டித்து, கடந்த 1ம் தேதியில் இருந்து பெலகாவியில் விவசாயிகள் போராட்டத்தை துவக்கினர். முதலில் பெலகாவியில் மட்டுமே நடந்த போராட்டம், நாட்கள் செல்ல செல்ல மாவட்டம் முழுதும் பரவியது.

பெலகாவியின் அதானி, சிக்கோடி, குர்லாபுரா, ஜம்போட்டி, கோகாக் ஆகிய பகுதிகளில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வியாபாரிகள் நேற்று தாங்களாக முன்வந்து கடைகளை அடைத்தனர்.

கோகாக்கில் இருந்து அதானி செல்லும் சாலையில் பல ஆயிரம் விவசாயிகள் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் எதிரொலியாக, அதானியில் நேற்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. குறைந்த பஸ்கள் மட்டுமே இயங்கின.

Advertisement