மது விற்பனை தொகையில் வேறுபாடு: 17 கடை ஊழியர்களுக்கு 'நோட்டீஸ்'
சென்னை: மது விற்பனையின் போது, ரொக்க பணம், டிஜிட்டல் பரிவர்த்தனையில் வேறுபாடு இருந்த, 17 கடை ஊழியர்கள் அபராதம் செலுத்த உத்தரவிட்டதுடன், 'மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, 'டாஸ்மாக்' நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. மதுபான ஆலையில் இருந்து, மதுக்கடைகள் வாயிலாக, 'குடி'மகன்களுக்கு மது பாட்டிலை விற்பது வரை முழுதும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, அனைத்து கடைகளுக்கும் கையடக்க வடிவில் விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடைகளில் ரொக்கப்பணம், 'டெபிட், கிரெடிட்' கார்டு, யு.பி.ஐ., எனப்படும், 'கியு ஆர்' குறியீட்டை, 'ஸ்கேன்' செய்து பணம் வழங்கலாம். எந்த முறையில் பணம் வசூலித்தாலும், அதை ஊழியர்கள் கருவியில் பதிவு செய்ய வேண்டும்.
வசூல் பணம் முறைகேடை தடுக்க, தினமும் கருவியில் உள்ள ரொக்க விற்பனை மற்றும் டிஜிட்டல் வாயிலாக நடந்த விற்பனை, ஊழியர்கள் வங்கியில் செலுத்திய பணம், கருவியில் உள்ள விற்பனை விபரங்களை ஒப்பீடு செய்து, வேறுபாடு உள்ளதா என்பதை கண்காணிக்க, மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் குறைபாடு இருந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், 2 சதவீத மாத வட்டியுடன், 50 சதவீத அபராதம் வசூலிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடைகளில் ஆய்வு பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. முதலாவதாக, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், கீழ்வேளூர், குத்தாலம், மயிலாடுதுறை, நாகை, சீர்காழி, தரங்கம்பாடி, திருக்குவளை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் உள்ள, 17 மதுக்கடைகளில், 10 முதல், 53,930 ரூபாய் வரை வேறுபாடு இருந்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்.இதையடுத்து, அந்த கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், இது குறித்து மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
சாலை விபத்தை தடுக்க சிறப்பு இயக்கம்: ராஜஸ்தான் அரசு இலக்கு
-
அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்: மத்திய அரசும் விசாரணையை துவக்கியது
-
உலகக்கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!
-
வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு: கொண்டாட மஹாராஷ்டிராவில் சிறப்பு ஏற்பாடு
-
மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 4 பேர் பலி: கேரளாவில் அதிகரிக்கும் அச்சம்
-
அதிகரிக்கும் கூட்டநெரிசல் : டில்லியில் நான்கு ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்