சரக்கு ரயில் மீது பயணியர் ரயில் மோதியதில் 8 பேர் பலி

1

பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணியர் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எட்டு பயணியர் உயிரிழந்தனர்; 14 பேர் காயமடைந்தனர்.

சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள கெவ்ராவில் இருந்து பிலாஸ்பூர் நோக்கி நேற்று மாலை பயணியர் ரயில் சென்றது.

அந்த ரயில் கடோரா, பிலாஸ்பூர் இடையே சென்றபோது, அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதைக் கண்டு ரயில் இன்ஜின் டிரைவர் பதற்றமடைந்து பிரேக் பிடிப்பதற்குள், பயணியர் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ரயிலில் இருந்த பயணியர் அலறி யடித்து இறங்கினர்.

இந்த விபத்தில் பயணியர் ரயிலின் ஒரு பெட்டி சரக்கு ரயில் மீது ஏறி அந்தரத்தில் தொங்கியது. விபத்தில் எட்டு பயணியர் உயிரிழந்தனர்; 14 பேர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு பிலாஸ்பூரில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு, தலா 10 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்றும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

பா.ஜ.,வை சேர்ந்த சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement