43 ஆண்டுகளாக சிறையில் இருந்த கொடூர கொலையாளி மரணம்: 5 குழந்தைகள், 4 மனைவியரை கொன்றவர்

வாஷிங்டன்: அமெரிக்காவில், தான் பெற்ற குழந்தைகள், நான்கு மனைவியர் உட்பட 13 பேரை கொன்றதாக, 43 ஆண்டுகளாக சிறையில் இருந்த கொடூர குற்றவாளி ஜார்ஜ் பேங்க்ஸ், 83, சிறுநீரக புற்றுநோயால் உயிரிழந்தார்.


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் வில்க்ஸ்-பாரே நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் பேங்க்ஸ்.

கடந்த 1982-ம் ஆண்டு, மதுபோதையில் இருந்த பேங்க்ஸ், ஒன்று முதல் ஆறு வயது உள்ள பெற்ற குழந்தைகள் ஐந்து பேரையும், நான்கு மனைவியரையும் துடிக்க, துடிக்க துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மேலும், அவரது வீட்டில் அப்போது விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.


பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த பேங்க்ஸ், நடந்து சென்ற நான்கு இளைஞர்களையும் சுட ஆரம்பித்தார். இவ்வாறு, 13 பேரை அவர் சுட்டுக் கொன்றுள்ளார். இதன் பின், தன் நண்பர் வீட்டில் தஞ்சம் அடைந்த பேங்க்ஸை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மிக கொடூரமான கொலை குற்றவாளியாக பேங்க்ஸ் கருதப்பட்டார்.

வழக்கை விசாரித்த பென்சில்வேனியா நீதிமன்றம், அவருக்கு மனநலம் சரியில்லை எனக் கூறி ஆயுள் தண்டனை விதித்தது.

இனவெறி சமூகத்தால் ஏற்படும் வலிகளை குழந்தைகள் அனுபவிக்கக்கூடாது என்பதற்காகவே சொந்த குடும்பத்தையே சுட்டுக் கொன்றதாக பேங்க்ஸ் போலீசாரிடம் கூறினார்.

கடந்த, 43 ஆண்டுகளாக அரிசோனா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜார்ஜ் பேங்க்ஸ் சிறுநீரக புற்றுநோயால் அவதிப்பட்டிருந்தார். சமீபத்தில் அவரது உடல்நிலை மோசமான நிலையில், சிறையிலேயே உயிரிழந்தார்.

Advertisement