ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி

13

பன்கா; ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது என்று ராகுலின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

பீஹார் முதல் கட்ட சட்டசபை தேர்தல் பிரசாரம் அவுரங்காபாத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பியும், லோக்சபா தலைவருமான ராகுல், ராணுவத்தை பற்றி கடுமையாக விமர்சித்தார்.

நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் உயர்ஜாதியினர் 10 சதவீதம் பேர் மட்டுமே ராணுவம், நீதித்துறை மற்றும் பெரிய நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டார். எஞ்சிய 90 சதவீதம் மக்களில் உள்ள மற்ற ஜாதியினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

இந் நிலையில், ராகுலின் குற்றச்சாட்டுக்கு பாஜ மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார். பீஹாரில் பன்கா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது;

ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது; ராணுவ வீரர்களுக்கு ஒரேயொரு மதம் மட்டுமே உள்ளது. அது சைன்ய தர்மம்(சைன்ய என்றால் ராணுவம், தர்மம் என்றால் கடமை, நீதி, நெறிமுறைகள் ஆகியவற்றை குறிக்கும். மகாபாரதத்தின் முதல் அத்தியாயமான சைன்ய தர்சனம் என்னும் போர் துவங்கும் முன் இரு படைகளையும் குறிப்பதாகும்) ஆகும். இதை தவிர வேறு எந்த மதமும் இல்லை.

நம் நாடு நெருக்கடியை கண்ட போதெல்லாம் வீரர்கள் தங்களின் துணிச்சல், வீரம் மூலம் தலை நிமிர செய்தனர். ராணுவத்தை அரசியலுக்குள் இழுக்காதீர்கள்.

நாட்டில் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். நாங்களும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாளர்கள்தான். ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருக்கிறோம்.

ஜாதி, மதம் மற்றும் மதத்தின் அரசியல் தான் நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவித்துள்ளது. சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் உயர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

ஜாதி, மதம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்ட விரும்பவில்லை. நம் நாட்டில் ஞானிகளும், மக்களும் ஒருபோதும் இதை சிந்தித்ததே இல்லை.

ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் அனைத்து பயங்கரவாத நிலைகளையும் அழித்துவிட்டோம். இந்த நடவடிக்கை இன்னமும் முடிவடையவில்லை. தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகளவில் நம் நாடு சக்திவாய்ந்த நாடாக அறியப்படுகிறது. சர்வதேச அளவில் நம் நாட்டின் நற்பெயர் வளர்ந்து உள்ளது.

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement