130 புதிய விரைவு பஸ்கள் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில், 'மல்டி ஆக்சில் வால்வோ பஸ்கள் 20' உட்பட, 130 புதிய பஸ்கள் பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில், தினமும் 1,080க்கும் மேற்பட்ட டீலக்ஸ், 'ஏசி' வசதியுள்ள விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இவற்றில் பயணம் செய்து வருகின்றனர்.

தற்போது, முன்பதிவு செய்யும் பயணியர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. முதல் முறையாக, மல்டி ஆக்சில் 'வால்வோ' வகையைச் சேர்ந்த 20 பஸ்கள் தயாரிப்பு பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன.

இந்த பஸ்கள், அடுத்த சில வாரங்களில் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்படும்.

அதிநவீன வசதிகளோடு வரும் இந்த புதிய வகை பஸ்கள், பயணியருக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இதேபோல், படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய, 110 புதிய சொகுசு பஸ்கள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

எனவே, இந்த 130 பஸ்கள், பொங்கல் பண்டிகைக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement