பூட்டா சிங் குறித்து அவதுாறு காங்., தலைவர் மீது வழக்கு

சண்டிகர்: முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் மறைந்த பூட்டா சிங் குறித்து, இழிவாகவும் ஜாதி ரீதியாகவும் கருத்து தெரிவித்ததாக, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வார்ரிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பூட்டாசிங் மகன் சரப்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநிலம், கபுர்தலா மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகார்:

தரன் தரன் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த, அக்கட்சியின் மாநில தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வார்ரிங், என் தந்தையும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான பூட்டாசிங் குறித்து இழிவாக கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும், ஜாதி ரீதியாகவும் கடுமையாகப் பேசினார். இது, என் குடும்பத்தினரை மிகவும் புண் படுத்தியுள்ளது.

மேலும், சீக்கிய மதத்தின் மஜாபி சமூகத்தினருக்கு மிகப்பெரும் அவமானத்தை ஏற்படுத்திஉள்ளது.

கறுப்பு சீக்கியர் என்றும் மஜாபி சமூகத்தினரை கிண்டல் செய்தார். இது, பஞ்சாப் மாநிலத்தில் ஜாதி அடிப்படையில் பதற்றத்தை ஏற்படுத்தும். எனவே, அம்ரீந்தர் சிங் ராஜா வார்ரிங் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விசாரணை நடத்திய போலீசார், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 196ன் கீழ் மதம், இனம் அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல் ஆகியவற்றின் கீழ் நேற்று முன் தினம், அம்ரீந்தர் சிங் ராஜா வார்ரிங் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement