ஜாமினில் வந்த ரவுடி மீண்டும் கைது கொலை வழக்கில் தேடப்பட்டவர் சிக்கினார்
புதுடில்லி: கொலை வழக்கில் ஏழு ஆண்டுகளாக சிறையில் இருந்த ரவுடி, ஜனவரி மாதம் ஜாமினில் வந்து, மீண்டும் மிரட்டி பணம் பறிக்கும் செயலைத் துவக்கினார்.
தீ விரமாக கண்காணித்த தனிப்படை போலீசார், ரவுடியை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல், மற்றொரு கொலை வழக்கில் இரு மாதங்களாக தேடப்பட்ட இரண்டு பேரும் பிடிபட்டனர்.
அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்தவர் மனோஜ், 29. கியாலாவில் 2017ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏழு ஆண்டுகளுக்கு கடந்த ஜனவரியில் ஜாமினில் வந்தார். ரகுபீர் நகரில் குடியேறிய மனோஜ், மீண்டும் ஒரு திருமணம் செய்து கொண்டார்.
ரமேஷ் நகர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் ஒரு கும்பலை உருவாகி, மீண்டும் குற்றச் செயல்களைத் துவக்கினார். கள்ளச்சாராய வியாபாரிகள், சூதாட்டம் நடத்துவோர் மற்றும் கடைக்காரர்களை மிரட்டி பணம் பறித்து வந்தார்.
மனோஜ் ஜாமினில் வந்ததில் இருந்தே அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்த தனிப்படை போலீசர், கடந்த 3ம் தேதி, ரமேஷ் நகரில் மனோஜை சுற்றிவளைத்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
இருவர் சிக்கினர் -புதுடில்லி ரோஹிணியில், செப். 5ம் தேதி, ஹபீப் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், புராரியைச் சேர்ந்த அமன் ரத்தோர், விக்கி மற்றும் அனில் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும், ராகேஷ் சிங் தேதா,27, மற்றும் ஹர்ஷ் சிங்,23, ஆகிய இருவரையும் தேடிவந்தனர். இருவர் மீதும் ஜாமினில் வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மயூர் விஹாரில் பதுங்கி இருந்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். ராகேஷ் மீது டில்லி மற்றும் குருகிராமில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.