தமிழகத்தில் காசநோயால் 79,462 பேர் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டில், 79,462 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என, மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரு லட்சம் பேரில், 179 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு, 125 ஆக உள்ளது. காசநோயை ஒழிக்க, மத்திய -- மாநில அரசுகள், பல முயற்சிகள் செய்து வருகின்றன.
அதன்படி, மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் காசநோயால் தமிழகத்தில் சராசரியாக 80,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காசநோயை விரைவாக கண்டறிவதற்கு, 'சிபிநாட் மற்றும் 'ட்ரூநாட்' போன்ற பரிசோதனைக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய ஊட்டச்சத்தை மேம்படுத்த, ஒவ்வொரு மாதமும் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் செலுத்தப்படுகிறது.
அதன்படி கடந்த ஆண்டில், 31.1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அரசு எவ்வளவு தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும், பல்வேறு காரணங்களால் பாதிப்பு தொடர்கிறது. இந்த ஆண்டில் இதுவரை 79,462 பேருக்கு காசநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.