பெண் வயிற்றில் 10 கிலோ கட்டியை அகற்றி குருகிராம் டாக்டர்கள் சாதனை!
புதுடில்லி: ஜம்மு - -காஷ்மீரைச் சேர்ந்த, 39 வயது பெண் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டியை, ஹரியானா மாநிலம் குருகிராம் மருத்துவமனையில், ஆபத்து நிறைந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர்கள் குழு அகற்றியது.
ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 39 வயது பெண், 15 ஆண்டுகளாக வயிற்றில் வளர்ந்து வரும் கட்டியுடன் அவதிப்பட்டார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.
ரத்த சிவப்பணு ஆனால், குணம் அடையவில்லை. நாளுக்கு நாள் வலி அதிகரித்து வந்தது. அவருக்கு ரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் ரத்த சிவப்பணுக்களின் அளவும் 4.5 என்ற ஆபத்தான அளவிலேயே இருந்தது. இதனால், உடல் ரீதியாக பல்வேறு உபாதைகளை அனுபவித்தார்.
கடந்த, 2022ம் ஆண்டு ஒரு பிரபலமான மருத்துவமனையில் கருப்பையை அகற்றினர். ஆனாலும், எந்த பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள, 'ஆர்ட்டெமிஸ்' மருத்துவமனைக்கு வந்தார். அங்கு, மகளிர் மருத்துவ புற்றுநோயியல் பிரிவில் அந்தப் பெண்ணுக்கு முழு பரிசோ தனை நடத்தப்பட்டது. உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கும் சிகிச்சை தரப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மயக்க மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ராஜேஷ் மிஸ்ரா தலைமையிலான டாக்டர்கள் குழு, செப்., 25ம் தேதி அந்தப் பெண்ணுக்கு வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்து, 10 கிலோ கட்டியை அகற்றினர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் மகளிர் மருத்துவ புற்றுநோயியல் துறை தலைவர் தலைவர் டாக்டர் ரூபிந்தர் சேகோன் கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீர் பெண்ணுக்கு செய்த அறுவைச் சிகிச்சை மிகவும் ஆபத்து நிறைந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த பகுதி முக்கிய ரத்தநாளங்கள் செல்லும் பகுதி. எனவே, டாக்டர்கள் குழு அதீத கவனத்துடன் இந்த அறுவைச் சிகிச்சையை செய்தனர்.
கண்காணிப்பு சிகிச்சையின் போதுஅந்தப் பெண்ணுக்கு இரண்டு யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. அந்தப் பெண் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் நலமாக இருக்கிறார்.
உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற கட்டிகள் தான் டாக்டர்களுக்கு சவால் நிறைந்தது. உடலில் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சிகிச்சை உணர்த்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.