அன்புமணி திருந்த வேண்டும்: சொல்கிறார் ராமதாஸ்
விழுப்புரம்: '' அன்புமணியும், அவரை சார்ந்தவர்களும் திருந்த வேண்டும், '' என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் நீண்டு கொண்டு செல்கிறது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வடுகத்தம்பட்டியில் அன்புமணி ஆதரவு பா.ம.க.,வினரும், ராமதாஸ் ஆதரவு பா.ம.க.,வினரும் ஆயுதங்கள் கொண்டு மோதிக் கொண்டனர். எம்.எல்.ஏ., அருள் முன்பு இந்த தாக்குதல் நடந்தது. இந்த விவகாரத்தில் , அன்புமணி ஆதரவு பா.ம.க., மாவட்டச் செயலர் ஜெயபிரகாஷ் உட்பட 20 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏழு பேரை கைது செய்துள்ளனர். அன்புமணி ஆதரவாளர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, எம்எல்ஏ அருள், நடராஜன் உட்பட 52 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபோல, மோதலில் காயமடைந்த அன்புமணி ஆதரவாளர் செந்தில்குமார் அளித்த புகாரில், எம்.எல்.ஏ., அருள் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ் கூறியதாவது: இனிமே எங்கேயாவது என்னுடைய பாசமுள்ள கட்சிக்காரர்கள், அவர்கள் மீது எங்கு ஏதாவது ஒரு சுண்டு விரல் பட்டாலும் அதற்கு காரணம் அன்புமணியும், அவருடைய மனைவி சவுமியாவுமே தான் காரணம்.
ஏனென்றால், நான் அவ்வளவு பாசத்தோடு, அவர்களை(தொண்டர்களை) நான் வளர்த்து வந்தேன். பாட்டாளி சொந்தங்களே என்று, என் உயிரினும் மேலான, என் உயிரினும் மேலான என் உயிரை விட மேலான என 3 முறை, அவர்கள் நேரே வந்தால் நான் கட்டித் தழுவும் அளவுக்கு என்னுடைய வார்த்தைகள் இருக்கும். உள்ளத்தில் இருந்து வரும். வார்த்தை ஜாலங்கள் எனக்கு பேசத் தெரியாது. பொய் பேசத் தெரியாது. மனதில் என்ன நினைக்கிறேனோ அப்படியே பேசிவிடுவேன். இந்த செய்தியை கொண்டு சென்று, உங்கள் மூலம் அன்புமணியும் அவர் சேர்ந்த ஒரு சிலரும், ஒரு கும்பல், அவர்கள் திருந்த வேண்டும் என்று உங்கள் மூலமாக செய்தியாக சொல்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.