நியூசிலாந்து 'திரில்' வெற்றி * கடைசி பந்தில் வீழ்ந்தது வெ.இண்டீஸ்

ஆக்லாந்து: இரண்டாவது 'டி-20' போட்டியில் நியூசிலாந்து 3 ரன்னில் 'திரில்' வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி, கடைசி பந்தில் வீழ்ந்தது.
நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. நேற்று இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு ராபின்சன் (39), கான்வே (16) ஜோடி துவக்கம் கொடுத்தது. ரச்சின் (11) ஏமாற்றினார்.
சிக்சர் மழை பொழிந்த சாப்மன், 19 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 28 பந்தில் 78 ரன் (ஸ்டிரைக் ரேட், 278.57) குவித்து அவுட்டானார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 207/5 ரன் எடுத்தது. மிட்சல் (28) அவுட்டாகாமல் இருந்தார்.
போராட்டம் வீண்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (0), அதனாசே (33) ஜோடி துவக்கம் தந்தது. அக்கீம் (7), கேப்டன் ஷாய் ஹோப் (24), ஹோல்டர் (16) ஏமாற்ற, 13 ஓவரில் 94/6 என திணறியது. வெற்றிக்கு கடைசி 42 பந்தில் 114 ரன் தேவைப்பட்டன. ஷெப்பர்டு (16 பந்து 34 ரன்), ராவ்மன் பாவெல் விளாச, கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன.
ஜேமிசன் பந்துவீசினார். முதல் 3 பந்தில் 10 ரன் கிடைத்தன. 4வது பந்தில் பாவெல் (16ல் 45) அவுட்டானார். கடைசி 2 பந்தில் 6 ரன் தேவைப்பட, 2 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 204/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

Advertisement