துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன் புதுச்சேரி பல்கலை., துணைவேந்தர் சந்திப்பு

புதுச்சேரி: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு, புதுடில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நீடித்த சாதனைகள் பற்றிய விரிவான விவரங்களை துணை வேந்தர் எடுத்துரைத்தார்.

குறிப்பாக கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமைகளில் பல்கலைக்கழகத்தின் தொடர்ச்சியான சிறப்பை எடுத்துரைத்தார்.

பல்கலைக்கழகத்தின் முயற்சிகளைப் பாராட்டிய துணை ஜனாதிபதி, புதுச்சேரி பல்கலைக் கழக வளர்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்கினார். வளர்ந்து வரும் தேசிய மற்றும் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப புதிய மற்றும் புதுமையான கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். முழுமையான மாணவர் வளர்ச்சியை வளர்ப்பதற்கு நவீன விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

ஆராய்ச்சி, புதுமை மற்றும் சமூக ஈடுபாடு மூலம் வளர்ந்த பாரதம்-2047 என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி நிறுவன பங்களிப்பை மேம்படுத்த வேண்டும் என, அறிவுரை வழங்கினார். மேலும், மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்கள் துவங்க வேண்டும். வளாகங்களில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என, அறிவுறுத்தினார்.

அப்போது துணைவேந்தர் பிரகாஷ் பாபு, தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

உயர்கல்வி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தொடர்ந்து சிறந்து விளங்குவதிலும் பல்கலைக்கழகம் உறுதிபூண்டுள்ளது என, துணை ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

Advertisement