பீஹார் முதல்கட்ட சட்டசபை தேர்தல் ஓட்டு சதவீதம் சொல்லும் சேதி: ஓர் பார்வை
புதுடில்லி; பீஹார் சட்டசபை முதல்கட்ட ஓட்டு சதவீதம் அதிகரித்து இருப்பது, அம்மாநில அரசியலில் புதிய கணக்கீடுகளை உருவாக்கி இருக்கின்றன.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பீஹார் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நிறைவடைந்து இருக்கிறது. இதில் மட்டும் 64.66 சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளது. இந்த வரலாறு காணாத ஓட்டு சதவீதம் அல்லது ஓட்டு போட மக்கள் காட்டிய தன்னெழுச்சியான ஆர்வம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே பல்வேறு வித வெற்றி கணக்குகளை போட வைத்திருக்கின்றன.
அதற்கு காரணம்... இந்த ஓட்டு சதவீதம் வரலாறு காணாத ஒன்று என்பதுதான். அதாவது 2000ம் ஆண்டு அங்கு அதிகபட்சமாக 62.57 சதவீதம் ஓட்டு பதிவாகியது. அதன் பின்னர் இப்போது கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து 8.46 சதவீதம் அதிகரித்து 64.66 ஆக பதிவாகி இருக்கிறது.
இந்த ஓட்டு சதவீதம் அதிகரிப்பு என்பது பீஹார் தேர்தல் (சட்டசபை+ லோக்சபா இரண்டையும் சேர்த்து) வரலாற்றில் இதற்கு முன் இல்லாத உயர்வு ஆகும். இப்படி ஓட்டு சதவீதம் அதிகரித்திருப்பது எந்த கட்சிக்கு அல்லது எந்த கூட்டணிக்கு லாபம் என்பது தான் அம்மாநில அரசியலில் மட்டும் அல்ல, தேசிய அளவிலும் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
முதல்கட்ட தேர்தல் நடைபெற்றுள்ள தொகுதிகள் மொத்தம் 121. இந்த தொகுதிகள் அம்மாநிலத்தில் உள்ள 18 மாவட்டங்களில் அடங்கியவை. மொத்தம் 3.75 கோடி தகுதியுடைய வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
இதுவே 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, 2.06 கோடி பேர் வாக்களித்து இருந்தனர். அதை விட தற்போது கூடுதல் வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர்.
பொதுவாக அதிக ஓட்டு சதவீதம் என்பது ஆளும்கட்சிக்கு எதிரான எழுச்சி என்பது அரசியல்வாதிகளின் எழுதப்படாத அரிச்சுவடி வார்த்தைகள். இந்த அரிச்சுவடிக்கு உண்மையான தரவுகள் என்பது எப்போதும் பூஜ்ஜியமே. ஏன் என்றால் இந்த அதிகரித்த ஓட்டு சதவீதம் ஆளுங்கட்சிக்கானதாக கூட மாறலாம்.
பீஹாரின் கடந்த கால தேர்தல் வரலாற்றில், எப்போது எல்லாம் 5 சதவீதம் ஓட்டுப்பதிவு அதிகரிக்கிறதோ அப்போது எல்லாம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 1967ல் ஓட்டு சதவீதம் 44.55ல் (1962ல் பதிவானது) இருந்து 51.50 சதவீதம் ஆக அதிகரித்தது. அதாவது 7 சதவீதம் அதிகம். அதன் எதிரொலியாக, காங்கிரஸ் அதிகாரத்தை இழந்தது. முதல்முறையாக காங். அல்லாத கூட்டணிக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தது.
1980ல் ஓட்டுப்பதிவு 7 சதவீதம் உயர்ந்து (1977ல் ஓட்டு சதவீதம் 57.33) ஜனதா கட்சி ஆட்சி வீழ, காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறியது. பின்னர் 1990ம் ஆண்டில் ஓட்டுப்பதிவானது 56.3 என்பதில் இருந்து 62 சதவீதமானது.அதாவது ஓட்டு சதவீதம் 5.8 எகிறியது. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வர, காங்கிரஸ் கட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்டது.
2000ம் ஆண்டில் 62.57 என்ற ஓட்டு சதவீதம், 2005ம் ஆண்டில் 16% கீழே இறங்கி 46.5 சதவீதமானது. அப்போது தான், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் ஆட்சியை முதல்முறையாக கைப்பற்றினார்.
2025 தேர்தலான இப்போது, 8.5 சதவீதம் ஓட்டுகள் அதிகரித்துள்ளது. இதை மையப்படுத்தி தான், எதிர்க்கட்சிகள் ஆட்சி மாற்றம் என்ற புள்ளியை கெட்டியாக பிடித்துக் கொண்டு 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் தொகுதிகளில் வரிந்து கட்டியபடி பிரசாரத்தில் இறங்கி உள்ளன.
அதிகம் பதிவான ஓட்டுகள் கங்கை நதியின் தெற்கே அமைந்துள்ள தொகுதிகளில் இருக்கின்றன. இந்த தொகுதிகளானது மிதிலாஞ்சல், கோசி, முங்கேர், சரண், போஜ்பூர் பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.
2020ல் இந்த 121 தொகுதிகளில் அரசியல் தட்பவெப்பம் வேறு மாதிரியாக வீசியது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கொண்ட கூட்டணி 61 தொகுதிகளை வென்றது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 59 இடங்கள் கிடைத்தன.
தேஜஸ்வி தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் 42 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜ 32 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 23 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் 8 தொகுதிகளை கைப்பற்றியது. விகாஷ்சீல் இன்சான் கட்சி, எல்ஜேபி உள்ளிட்ட மற்ற சில கட்சிகள் சிற்சில தொகுதிகளை வென்றிருந்தன.
ஆனால், 2025 தேர்தல், 2020ல் காணப்பட்ட கட்சிகளின் கூட்டணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. 2020ல் தனியாக களம் கண்ட சிராக் பாஸ்வான், உபேந்திர குஷ்வாஹா இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். மறுமுனையில் முகாஷ் சஹானியின் விகாஷ்சீல் இன்சான் கட்சி, எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இருக்கிறது.
கணக்குகள் மாறினாலும், ஆட்சியும் அதிகாரமும் எங்களுக்கே என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பெரும் நம்பிக்கையுடன் 2ம் கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாகி இருக்கின்றன.
நிதிஷ்குமாருக்கு இந்த சட்டசபை தேர்தலே இறுதி தேர்தல் என்பதால் எப்படியும் மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கவே மக்கள் அதிகளவு திரண்டு ஓட்டுபோட்டுள்ளனர் என்று அக்கட்சியினர் நம்பிக்கை வார்த்தைகளை கூறுகின்றனர்.
மக்களுக்கு அறிவித்துள்ள நல்ல திட்டங்கள், தேர்தல் அறிக்கை, பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரின் அனல் பிரசாரம் ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் என்பது பாஜ கூட்டணியின் கணக்காக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணியானது, மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தான் ஓட்டு சதவீதம் அதிகரிப்புக்கு காரணம் என்கின்றனர்.
எது எப்படி இருந்தாலும்... 2ம் கட்ட ஓட்டுப்பதிவுக்கு காத்திருக்கும் எஞ்சிய 3 கோடி வாக்காளர்களே ஆட்சியை யாரின் கையில் தருவது என்பதை முடிவு செய்ய இருக்கின்றனர் என்பது தான் தற்போதைய நிதர்சனமாக இருக்கிறது.