2002ம் ஆண்டு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல்

திருப்பூர்: வாக்காளர்களின் வசதிக்காக, கடந்த 2002 தீவிர திருத்த பட்டியலை, மிக சுலபமாக ஓட்டுச்சாவடி வாரியாக பதிவிறக்கம் செய்யும் வசதியை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் சேர்த்துள்ளது.

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த, 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

வாக்காளருக்கு வழங்கப்படும் படிவத்தில், சுய விவரங்கள் மற்றும் கடந்த 2002ம் ஆண்டு தீவிர திருத்த பட்டியலில் தனது பெயர் அல்லது பெற்றோர் பெயர் இடம் பெற்றிருப்பின் அவ்விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு தீவிர திருத்த பட்டியலில் பெயர் இடம்பெறாத வாக்காளர்கள், வரும் டிச. 9ல் வரைவு பட்டியல் வெளியான பின், தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ள 13 வகை ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொடுப்பது அவசியமாகிறது.

வாக்காளர் வசதிக்காக, தேர்தல் கமிஷன், https://erolls.tn.gov.in/electoralsearch/ என்கிற தளத்தில், தீவிர திருத்த பட்டியல் (2002) விவரங்களை தேடிப்பெறும் வசதியை சேர்த்துள்ளது.

மாவட்டம், சட்டசபை தொகுதி, வாக்காளர் பெயர் மற்றும் உறவினர் பெயர் விவரங்களை அளித்து தேடும்போது, ஒரே தொகுதியில், பெயர் ஒற்றுமையுள்ள ஒன்றுக்கும் மேற்பட்டோரில் பெயர்கள் கிடைக்கின்றன. இதனால், குழப்பம் ஏற்படுகிறது. தற்போது, 2002ல் வெளியான வாக்காளர் பட்டியலை, ஓட்டுச்சாவடி வாரியாக தேடி பி.டி.எப்., வடிவில் பதிவிறக்கம் செய்யும் வசதியை, தேர்தல் கமிஷன் தனது இணையதள பக்கத்தில் சேர்த்துள்ளது. வாக்காளர்கள், https://erolls. tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx என்கிற முகவரியில் சென்று, விவரங்களை தேர்வு செய்தால் போதும். வாக்காளர் பட்டியல் முழுமையாக கிடைக்கும்.

அதில், வாக்காளர் பெயர், உறவினர் பெயர், அடையாள அட்டை எண், வரிசை எண் மட்டுமின்றி வீட்டின் கதவு எண் விவரங்களும் கிடைக்கின்றன.

இதனால், எவ்வித குழப்பமும் இன்றி, வாக்காளர்கள் தங்கள், விவரங்கள் மற்றும் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர் அனைவரின் விவரங்களை மிக சுலபமாக பெற முடியும். 2002ம் ஆண்டு தவிர, 2005, 2017, 2018 என, நடப்பு 2025ம் ஆண்டு வரையிலான வாக்காளர் பட்டியல்கள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement