பைக் மீது கார் மோதி விபத்து தாத்தா, பேத்தி பலி; மூவர் காயம்

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையத்தில் பைக் மீது கார் மோதிய விபத்தில், தாத்தா, பேத்தி இருவர் இறந்தனர்.

கோவை கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தை சேர்ந்தவர் முருகேஷ், 57, கூலி தொழிலாளி. அவரது மனைவி ஜோதி, 52, மகள் சந்தியா, 26, பேத்தி கனிஷ்கா, 3, மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை என ஐந்து பேரும் ஒரே பைக்கில் சென்றனர்.

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையத்தில் சர்வீஸ் ரோடு அருகே சென்ற போது, எதிரில், கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி, சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில், சம்பவ இடத்திலேயே முருகேஷ் மற்றும் கனிஷ்கா இறந்தனர். மற்ற மூவரும் படுகாயமடைந்தனர்.

அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பினர். விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விசாரணையில், விபத்துக்கு காரணமான எலக்ட்ரிக் காரை ஓட்டி வந்தது, கோவை காமராஜர் புரத்தை சேர்ந்த ராஜ், 60, என்பது தெரியவந்தது. போலீசார் காரை பறிமுதல் செய்து, ராஜை கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், 'கோவில்பாளையம் சர்வீஸ் ரோட்டில் இருந்து, ஒரே பைக்கில் மூன்று பெரியவர்கள், இரு குழந்தைகளுடன் பயணித்துள்ளனர். ெஹல்மெட் அணியவில்லை. பிரதான ரோட்டில் இணைந்த போது, எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement