தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டியை உடனே விடுவியுங்கள்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும்படி முதல்வர் ஸ்டாலினை, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு உண்டான ஜிஎஸ்டி வரியை அரசே செலுத்தும் என்று அரசாணை எண். 23, 15.9.2025 அன்று வெளியிடப்பட்ட பின்னும், இதுவரை ஜிஎஸ்டி வரிக்கான நிதியை தமிழக அரசு விடுவிக்க வில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற பணிகளுக்கு உண்டான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் விடுவிக்காமல் சிரமப்படுகின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை கூட விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?

எனவே, தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும் படி முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement