இந்திய பவுலர்கள் அபாரம் * மூன்று விக்கெட் சாய்த்த பிரசித்
பெங்களூரு: இந்திய 'ஏ' அணி பவுலர்கள் சிறப்பாக செயல்பட, தென் ஆப்ரிக்க 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 221 ரன்னில் ஆல் அவுட்டானது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் (நான்கு நாள்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா 'ஏ' வென்றது. இரண்டாவது போட்டி பெங்களூருவில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய 'ஏ' அணி 255 ரன் எடுத்தது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. தென் ஆப்ரிக்க 'ஏ' அணி முதல் இன்னிங்சை துவக்கியது. ஹெர்மான், லெசெகோ ஜோடி துவக்கம் தந்தது. இந்திய 'ஏ' தரப்பில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா என மூவரும் 'வேகத்தில்' மிரட்டினர். முதலில் ஆகாஷ் தீப், லெசெகோ (0), பவுமாவை (0) 'டக்' அவுட்டாக்கினார். சிராஜ் பந்தில் ஹம்சா (8) அவுட்டானார். பிரசித் 'வேகத்தில்' ஹெர்மான் (28), கோனர் (0) வெளியேறினர்.
குல்தீப் சுழலில், தியன் வான் (6) போல்டானார். ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் வேகமாக ரன் சேர்த்தார் கேப்டன் ஆக்கர்மன். இவர் 118 பந்தில் 134 ரன் எடுத்து, ஹர்ஷ் துபே பந்தில் வீழ்ந்தார். சுப்ராயென் (20) ரன் அவுட்டானார். தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 221 ரன்னில் ஆல் அவுட்டானாது. இந்தியா 'ஏ' சார்பில் பிரசித் கிருஷ்ணா 3, சிராஜ், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
சரிந்த 'டாப்'
இந்திய 'ஏ' அணி 34 ரன் முன்னிலையுடன், இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. அபிமன்யு ஈஸ்வரன் 'டக்' அவுட்டாக, சாய் சுதர்சன் 23, தேவ்தத் படிக்கல் 24 ரன் எடுத்தனர். இரண்டாவது நாள் முடிவில் இந்திய 'ஏ' அணி இரண்டாவது இன்னிங்சில் 78/3 ரன் எடுத்து, 112 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ராகுல் (26), குல்தீப் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.