உலக செஸ்: அர்ஜுன், பிரனவ் வெற்றி
கோவா: உலக கோப்பை செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், பிரனவ் வெற்றி பெற்றனர்.
கோவாவில், செஸ் உலக கோப்பை 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன் குகேஷ், அர்ஜுன் உட்பட 10 இந்திய வீரர்கள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.
நேற்று மூன்றாவது சுற்றின் முதல் போட்டி நடந்தது. இந்திய வீரர் அர்ஜுன், உஸ்பெகிஸ்தானின் ஷம்சிதினை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன், 30 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 1.0-0 என முன்னிலை பெற்றார். இன்று இரண்டாவது போட்டியை 'டிரா' செய்தால், நான்காவது சுற்றுக்கு முன்னேறலாம்.
இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, முதல் போட்டியில் பெல்ஜியத்தின் டேனியலை வென்று 1.0-0 என முன்னிலை பெற்றார். இந்திய வீரர் பிரனவ், லிதுவேனியாவின் திதாசை 102வது நகர்த்தலில் வீழ்த்தினார்.
குகேஷ், ஜெர்மனியின் பிடரெரிக்கை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 34 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். கடந்த உலக கோப்பை தொடரில் பைனலில் பங்கேற்ற, இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஆர்மேனியாவின் ராபெர்ட்டை எதிர்கொண்டார்.
கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 30 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.