இந்திய ஹாக்கி நுாற்றாண்டு விழா * ஜூனியர் கோப்பையை பெற்றார் உதயநிதி
புதுடில்லி: இந்திய ஹாக்கியின் நுாற்றாண்டு விழா நேற்று டில்லியில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி, ஜூனியர் உலக கோப்பையை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) அமைப்பு 1925, நவ. 7ல், குவாலியரில் துவங்கப்பட்டது. இது, இந்தியாவில் துவக்கப்பட்ட முதல் தேசிய விளையாட்டு அமைப்பு. கடந்த 2024 நவ. 7ல், இந்த அமைப்பு 100வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. தற்போது, இந்திய ஹாக்கி அமைப்பின் 100வது ஆண்டு விழா, நேற்று டில்லி, தயான்சந்த் ஹாக்கி மைதானத்தில் நடந்தது.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழக துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்று, நுாற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டனர்.
பின், 'ஜூனியர் ஹாக்கி 2025' க்கான உலக கோப்பையை, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முறைப்படி பெற்றுக் கொண்டார்.
முன்னதாக நடந்த நட்பு போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு, அமைச்சர் உதயநிதி பரிசு வழங்கினார்.
அவர் பேசியதாவது:
ஹாக்கி விளையாட்டுக்கு தமிழகம் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளது. இந்திய அணிக்கு தரமான விளையாட்டு வீரர்களை அளித்ததுடன் மட்டுமன்றி, 1996ல், இந்தியாவின் முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடரை, சென்னையில் நடத்தியது. மீண்டும், 2005ல் சாம்பியன்ஸ் டிராபி, 2007ல் ஆசிய கோப்பை உட்பட பல்வேறு சர்வதேச தொடர்களை தமிழகம் நடத்தியுள்ளது.
இந்த வரிசையில், வரலாற்று சாதனையாக தற்போது, 'ஜூனியர்' உலகக்கோப்பை ஹாக்கி தொடர் (நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை) சென்னை, மதுரையில் நடக்க உள்ளன. உலகின் 24 அணிகள் மோதும் இத்தொடரில் 72 போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக, ரூ. 70 கோடி நிதியை, தமிழக அரசு அளித்துள்ளது.
தமிழக அரசின் முயற்சியின் காரணமாக, மாநிலம் முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த, 11,000 மாணவர்கள், ஹாக்கி விளையாட்டு வீரர்களாக உருவெடுத்து வருகின்றனர். இந்திய ஹாக்கி கூட்டமைப்பு, மென்மேலும் சிறந்த விளங்கவும், உலக ஹாக்கி விளையாட்டில், இந்தியா தலைமை தாங்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.
கோப்பை பயணம்
எதிர்கால ஹாக்கி வீரர்களுக்கு ஊக்கம் தரவும், 'உலக' தொடர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜூனியர் உலக கோப்பை நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது (நவ. 26 வரை). லக்னோ, ஆமதாபாத், பாட்னா, ஐதராபாத், பெங்களூரு கடைசியாக திருவனந்தபுரம் என 20 முக்கிய நகரங்களுக்கு செல்லும். உலக கோப்பை துவங்கும் முன் தமிழகத்தை அடையும்.