தொடரை வெல்லுமா இந்தியா * இன்று ஐந்தாவது 'டி-20' மோதல்
பிரிஸ்பேன்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஐந்தாவது 'டி-20' போட்டி இன்று பிரிஸ்பேனில் நடக்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால், 'ஹாட்ரிக்' வெற்றியுடன், இந்தியா தொடரை வெல்லலாம்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2 வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3, 4வது போட்டியில் போட்டியில் வென்ற இந்தியா 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி போட்டி இன்று பிரிஸ்பேன் மைதானத்தில் நடக்கிறது.
திணறும் சுப்மன்
இந்திய அணிக்கு சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஜோடி துவக்கம் தருகிறது. அபிஷேக் சர்மா (4 போட்டி, 140 ரன்) வழக்கம் போல வேகமாக ரன் சேர்க்கிறார். சுப்மன் மட்டும் தொடர்ந்து திணறுகிறார். ஆஸ்திரேலிய மண்ணில் கடைசி 7 இன்னிங்சில் (10, 9, 24, 37, 5, 15, 46) சுப்மன் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இன்று கடைசி போட்டியில் மீண்டு வந்தால் நல்லது.
கேப்டன் சூர்யகுமார் (39, 1, 24, 20), திலக் வர்மா (0, 29, 5) என இருவரும் அதிக ரன் சேர்க்க வேண்டும். பின் வரிசையில் அக்சர் படேல், வாஷிங்டன் அணிக்கு உதவுவது பலம். சஞ்சு சாம்சனுக்குப் பதில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா (22, 3) இரு போட்டியிலும் பெரியளவு கைகொடுக்காதது ஏமாற்றம்.
'சுழல்' கூட்டணி
பவுலிங்கை பொறுத்தவரையில் இந்திய அணிக்கு பும்ரா (4 போட்டி, 3 விக்.,), அர்ஷ்தீப் சிங் (2ல் 4 விக்.,) ஜோடி வேகப்பந்து வீச்சில் விக்கெட் சாய்ப்பது பலம். சுழலில் குல்தீப் இல்லாத போதும், வருண் சக்ரவர்த்தி (5), வாஷிங்டன் (3), அக்சர் படேல் (2) கூட்டணி நம்பிக்கை தருகிறது. 'ஆல் ரவுண்டர்' ஷிவம் துபே தன் பங்கிற்கு உதவினால், இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற தொடரை கைப்பற்றலாம்.
மார்ஷ் பலம்
ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை பெரிதும் நம்பியுள்ளது. மாறாக இதுவரை களமிறங்கிய 3 போட்டியில், 87 ரன் தான் எடுத்துள்ளார். 'சீனியர்' ஸ்டாய்னிசும் (87) ஏமாற்றுகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்லிஸ் (33) தடுமாறுகிறார். கடந்த போட்டியில் 91/3 என இருந்த ஆஸ்திரேலியா, அடுத்து இந்திய சுழலில் சிக்கியது. 28 ரன்னில் 7 விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இன்று மீண்டு வர முயற்சிக்கலாம். 'வேகத்தில்' நாதன் எல்லிஸ் (9), பார்ட்லெட் (4), சுழலில் ஜாம்பா (3) சிக்கல் தர உள்ளனர்.
ஆடுகளம் எப்படி
பிரிஸ்பேன் ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக பவுன்சர் ஆகும். வேகங்களுக்கு கைகொடுக்கும் என்றாலும், இந்திய பவுலிங் கூட்டணியில் மாற்றம் இருக்காது என நம்பலாம்.
* இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் 2018ல் இங்கு மோதின. மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டியில் இந்தியா 4 ரன்னில் தோற்றது.
மழை வருமா
* பிரிஸ்பேனில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். போட்டி நேரத்தில் இடியுடன் கூடிய மழை வர, அதிகபட்சம் 48 முதல் 51 சதவீதம் வாய்ப்புள்ளது. போட்டி பாதிக்கப்படலாம்.
பும்ரா '100'
இன்று பும்ரா ஒரு விக்கெட் சாய்த்தால், டெஸ்ட் (50ல் 226), ஒருநாள் (89ல் 149), 'டி-20' (79ல் 99) என மூன்று வித கிரிக்கெட்டில் தலா 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய பவுலர் என சாதனை படைக்கலாம்.