வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறும் இந்தியா: 4 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேச்சு

20


லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில், 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர், ''இந்தியா வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது'' என தெரிவித்தார்.


நமது நாட்டில் ரயில் பயணிகளிடம் வந்தே பாரத் ரயில் சேவைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து புதிதாக எர்ணாகுளம் - பெங்களூரு, பிரோஸ்பூர் - டில்லி, லக்னோ - ஷஹாரான்பூர், பனாரஸ் - கஜூராஹோ நகரங்களுக்கு இடையே புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில் சேவையை இன்று ( நவ.,08) காலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி வாரணாசியில் நடந்தது.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: புதிய 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நகரின் வளர்ச்சி என்பது சிறந்த போக்குவரத்து தொடர்பு கிடைத்ததும் தொடங்குகிறது. உள்கட்டமைப்பு என்பது பெரிய பாலங்கள் நெடுஞ்சாலைகளுடன் நின்று விடுவதில்லை. புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடர்புகளை மேம்படுத்தி மக்களுக்கு கூடுதல் வசதியை தரும். பெரும்பாலான நாடுகளின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது.



இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அமிர்த பாரத் போன்ற ரயில்கள் புதிய தலைமுறை இந்திய ரயில்வேக்கு அடித்தளம் அமைக்கின்றன. கடந்த 11 ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் புனித யாத்திரைத் தலங்களில் வளர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. வாரணாசியில் உள்ள புனித யாத்திரைத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் உ.பி.யின் பொருளாதாரத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பங்களித்துள்ளனர்.


வாரணாசிக்குச் செல்வதையும், இங்கு தங்குவதையும் அனைவருக்கும் ஒரு சிறப்பு அனுபவமாக மாற்றுவதே எங்கள் முயற்சியாக இருக்கிறது. புதிய ரயில் சேவைகள் சுற்றுலா துறையில் வளர்ச்சியை உருவாக்கும். உள்ளூர் பொருளாதாரங்களை ஊக்குவிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். எர்ணாகுளம்- பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் மத்திய அமைச்சரும், பாஜ எம்பியுமான சுரேஷ் கோபி குழந்தைகளுடன் கலந்துரையாடி சாக்லேட்டுகளை வழங்கினார்.

4 புதிய வந்தே பாரத் ரயில்கள்!




இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த 4 வந்தே பாரத் ரயில்கள் சிறப்புகள் என்னென்ன?

* 1. எர்ணாகுளம் - பெங்களூரு

எர்ணாகுளம்- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய 7 இடங்களில் நின்று செல்லும்.



இரண்டு முக்கிய ஐடி மற்றும் வர்த்தக மையங்களை இணைப்பதால், வல்லுநர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பயன்பெறுவதுடன் தமிழகம், கேரளா, கர்நாடகாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

இதன் மூலம் இந்த வழித்தடத்தில் பயண நேரம் 8 மணி நேரம் 40 நிமிடங்களாக குறையும்.



2. பனாரஸ் - கஜூராகோ

உ.பி.,யின் பனாரஸ் நகரில் இருந்து ம.பி.,யின் கஜூராகோ இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூடம் வழியே பயணிக்கிறது. இது மதம் சார்ந்த மற்றும் கலாசார சுற்றுலாவை ஊக்குவிக்கும்.



3. லக்னோ - ஷஹாரான்பூர்

உ.பி.,யின் ஷஹாரான்பூர் முதல் லக்னோ இடையிலான இன்று தொடங்கப்பட்டு உள்ள வந்தே பாரத் ரயில் சேவையால் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். இந்த ரயிலானது லக்னோ, சீதாபூர், ஷாஜஹான்பூர், பைரேலி, மொராதாபாத், பிஜ்னூர் நகரங்களில் நின்று செல்லும்.



4. பிரோஸ்பூர் - டில்லி

பஞ்சாபின் பிரோஸ்பூர் - டில்லி இடையே இன்று தொடங்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் சேவை மூலம் இரு நகரங்கள் இடையிலான பயண நேரம் 6 மணி 40 நிமிடமாக குறையும். வர்த்தகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகுவதுடன், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்.

Advertisement