டில்லியில் சகஜநிலைக்கு திரும்பியது விமான சேவைகள்; விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு

1


புதுடில்லி: ஏஎம்எம்எஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், டில்லி விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவைகள் சகஜநிலைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் டில்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமான போக்குவரத்தை கட்டுப்படுத்தும் முக்கிய தகவல்தொடர்பு வலை அமைப்பான AMSSல் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. நேற்று தொடங்கிய இந்த பாதிப்பு இன்றும் நீடித்தது.

இதனால், டில்லியில் 800க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் அதிகாரிகளும், இன்ஜினியர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக, டில்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் சகஜநிலைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விமான நிலையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தகவல் தொடர்பு வலை அமைப்பான AMSSல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. இதனால், விமான நிலையத்தின் செயல்பாடுகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. இதன் காரணமாக ஏற்பட்ட சிரமங்களை குறைக்கும் வகையில், அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். பயணிகள் தாங்கள் பதிவு செய்துள்ள விமானம் பற்றி தகவல்களை, அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து கேட்டறிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement