டிஎன்ஏ கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்

8


புதுடில்லி: டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் 97 வயதில் காலமானார்.


டிஎன்ஏவை முதன்முதலில் கண்டறிந்தவர் சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் ஆவார். இவர் 1869ம் ஆண்டு "நியூக்ளின்" என்று பெயரிட்டார். ஆனால், டிஎன்ஏவின் கட்டமைப்பை கண்டறிந்தவர்கள் அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஆங்கில இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக் ஆவர். இவர்கள் 1953ம் ஆண்டு இதைக் கண்டுபிடித்தனர்.

டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் 97 வயதில் காலமானார். பிரான்சிஸ் கிரிக் உடனான இவரது புரட்சிகரமான பணி நவீன மரபியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தை மாற்றியது. இவரது மரணத்தை லாங் தீவில் உள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகம் உறுதிப்படுத்தியது. அங்கு அவர் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.



வாட்சன், பிரிட்டிஷ் இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக்குடன் சேர்ந்து, 1953ம் ஆண்டில் டிஎன்ஏவின் கட்டமைப்பை கண்டுபிடித்தார். இது உயிரியலில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு திருப்புமுனையாகும். மேலும் மரபணு பொறியியல், மரபணு சிகிச்சை மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கு வழி வகுத்தது. இந்த கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் 1962ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

யார் இந்த ஜேம்ஸ் வாட்சன்?



* ஏப்ரல் 6ம் தேதி 1928ம் ஆண்டு சிகாகோவில் பிறந்த ஜேம்ஸ் வாட்சன், 19 வயதில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இந்தியானா பல்கலைக்கழகத்தில் மரபியலில் முனைவர் பட்டம் பெற்றார்.



* 1951ம் ஆண்டில், அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேவென்டிஷ் ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு அவர் கிரிக்கைச் சந்தித்து டிஎன்ஏவின் கட்டமைப்பைக் கண்டறியும் தனது தேடலைத் தொடங்கினார்.


* டிஎன்ஏ கண்டுபிடிப்புக்குப் பிறகு, வாட்சன் 1956ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு, அவர் மரபியல் புரட்சியை உருவாக்க இளம் விஞ்ஞானிகளின் தலைமுறையை ஊக்கப்படுத்தினார்.


* 1968ம் ஆண்டில், வாட்சன் கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் இயக்குநரானார். அங்கு அவர் நீண்டகாலமாக பணியாற்றினார்.


இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் இவரது பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது என புகழாரம் சூட்டி உள்ளனர்.

Advertisement