37 துணை துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜப்பான் துாதரகம் உட்பட, 37 நாடுகளின் துணை துாதரகங்களுக்கு, இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்தது. அதில், ஆழ்வார்பேட்டை செனடாப் சாலை, 1வது தெருவில் உள்ள ஜப்பான் துாதரகம் உட்பட, 37 நாடுகளின் துணை துாதரகங்களுக்கும், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வீடு, மயிலாப்பூரில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. சம்பவ இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் நடத்திய சோதனையில், வெடிப்பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

மிரட்டல் விடுத்த நபரின் இ-மெயில் முகவரியை பயன்படுத்தி, அவர் யார் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement