கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டரால் சர்ச்சை

51

திருநெல்வேலி : திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், பயணியிடம் அவதுாறாகவும், மத ரீதியாகவும் பேசியதை கண்டித்து வள்ளியூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.


கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தபுரம் பணிமனையை சேர்ந்த டிஎன்.74 என்.2120 என்ற பதிவெண் கொண்ட அரசு பஸ், தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே நாலுமாவடி கிறிஸ்துவ சபையில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு இன்று(நவ.,09) அதிகாலை, 4:50 மணிக்கு திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தது. பின்னர் அதிகாலை, 5:00 மணியளவில் நாகர்கோவில் புறப்பட்டது.


அந்த பஸ்சில் வள்ளியூரை சேர்ந்த கோவில் பூஜாரி சுப்பிரமணியன், தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பயணித்தார். அவர் மேல் சட்டை அணியவில்லை. ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். 'பஸ் வள்ளியூருக்குள் செல்லாது; பைபாஸில் மட்டுமே நிற்கும்' என, கண்டக்டர் அந்தோணி அடிமை தெரிவித்தார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன், 'இந்த பஸ் வழக்கமாக வள்ளியூருக்குள் செல்லும். ஏன் இன்று பைபாசில் இறங்க சொல்கிறீர்கள்?' என, கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த கண்டக்டர், 'பஸ்சில் நாலுமாவடி கிறிஸ்துவர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். உன் ஒருத்தனுக்காக மட்டும் வள்ளியூருக்குள் வர முடியாது' என, அவதுாறாக பேசினார்.


சுப்பிரமணியன் இறங்க மறுத்ததால், பஸ் வள்ளியூருக்குள் சென்றது. அங்கு அவர் குடும்பத்தினர் பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வள்ளியூர் பொதுமக்களும் பஸ் முன் கூடி போராட்டத்தில் இணைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சுப்பிரமணியனிடம் பேச்சு நடத்தினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், பஸ் நாகர்கோவில் புறப்பட்டு சென்றது.


சுப்பிரமணியன் கூறுகையில், ''பஸ்சில் இருந்த பெரும்பாலான பயணியர் கண்டக்டருக்கு ஆதரவாக மத ரீதியாக நடந்து கொண்டனர். இந்த பஸ் நாலுமாவடியில் இருந்து அவர்களுக்காக மட்டும் ஒப்பந்தம் பேசி இயக்கப்படவில்லை. அனைவரும் டிக்கெட் எடுத்து தான் பயணித்தோம். கண்டக்டரும் அவதுாறாக பேசினார். இதை வீடியோவாக பதிவு
செய்துள்ளேன்,'' என்றார்.


இதுபோன்ற பிரச்னைகள் அடிக்கடி நடப்பதாகவும், ஆக., 31ம் தேதி இதே பஸ் வள்ளியூருக்குள் செல்லாததால் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


வள்ளியூர், ராதாபுரம் சட்டசபை தொகுதிக்குள் வருகிறது. இது சபாநாயகர் அப்பாவு தொகுதி என்றாலும், அரசு பஸ்கள் வள்ளியூருக்குள் செல்வதை பெரும்பாலும் தவிர்க்கின்றன என்பதே பொதுமக்கள் குற்றச்சாட்டு. திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே கண்டக்டர் இல்லாமல் இயங்கும், 'ஒன் டூ ஒன்' பஸ்கள் தவிர, மற்ற அனைத்து அரசு பஸ்களும் வள்ளியூருக்குள் செல்வது கட்டாயம். அதை பின்பற்றாமல் சிலர் பயணியரிடம் கடுமையாக நடந்து கொள்வது தொடர்கிறது.


மத ரீதியாகவும், அவதுாறாகவும் நடந்து கொண்ட கண்டக்டர் அந்தோணி அடிமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வள்ளியூர் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நாகர்கோவில் அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement