கொள்கையை ஆதரிக்கிறோம்; கட்சியை அல்ல: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

6

பெங்களூரு: ''நாங்கள் கொள்கையை தான் ஆதரிக்கிறோம். அரசியல் கட்சியை ஆதரிக்கவில்லை,'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.


பெங்களூருவில் ''100 Years of Sangh Journey: New Horizons' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மோகன் பகவத் பேசியதாவது: நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை. நாங்கள், ஓட்டு அரசியல், தற்போதைய அரசியல், தேர்தல் அரசியல் உள்ளிட்டவற்றில் பங்கேற்க மாட்டோம். சமூகத்தை ஒற்றுமைப்படுத்த சங்கம் பாடுபடுகிறது. அரசியல் இயற்கையிலேயே பிரிவினையை ஏற்படுத்தும். இதனால், அரசியலில் இருந்து விலகி இருக்கிறோம். நாங்கள் கொள்கைகளை ஆதரிக்கிறோம். குறிப்பாக, நாம் ஒரு சக்தியாக இருப்பதால், சரியான கொள்கையை ஆதரிக்க எங்கள் ஆற்றலை பயன்படுத்துவோம். தனிநபரையோ, கட்சியையோ இல்லை. கொள்கையை மட்டும் ஆதரிப்போம்.


அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என விரும்பினோம். இதனால், கோயில் கட்டுவதற்கு ஆதரவானவர்களை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் ஆதரித்தனர். பாஜ தான் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து இருந்தால் அக்கட்சிக்கு தொண்டர்கள் ஓட்டு போட்டு இருப்பார்கள்.


எங்களுக்கு எந்தவொரு கட்சி மீது தனிப்பாசம் ஏதும் இல்லை. ஆர்எஸ்எஸ் கட்சி என ஏதும் இல்லை. எந்த கட்சியும் எங்களுடையது அல்ல. அனைத்து கட்சிகளும் பாரதிய கட்சிகள் என்பதால், எங்களுடையது. நாங்கள் ராஷ்ட்ர நீதியை ஆதரிக்கிறோம். ராஜநீதியை அல்ல. மக்கள் என்ன செய்தாலும் அது அவர்களின் உரிமை. ஆனால், நாங்கள் பெருமைப்படும் ராஷ்ட்ர நீதிக்கு ஆதரவாக எங்களது கொள்கையை செலுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement