ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னை: ஜெ.,வால் முடியாததை ஸ்டாலின் தீர்ப்பாரா?

4

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதியில் இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாத அடிமனை பிரச்னைக்கு, முதல்வர் ஸ்டாலின் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலைச் சுற்றி உத்திரவீதி, சித்திர வீதி, சாத்தார வீதி, வடக்கு வீதி, கீழ அடையவளஞ்சான் வீதி, மேல அடையவளஞ்சான் என, ஸ்ரீரங்கம் நகர் முழுவதும், 360 ஏக்கர் நிலம் கோவிலுக்கு சொந்தமானது.


இந்த இடத்தில் பலதலைமுறைகளாக, நுாறு ஆண்டுகளுக்கு மேல் பல வீடுகள் கட்டி இருந்து வருகின்றனர். ஆகையால் அந்த இடங்களை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரி வருகின்றனர். ஆனால் கோவில் நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கிடையே, 2010ம் ஆண்டுக்கு முன் பலருக்கு பட்டா வழங்கப்பட்டது. பின் அதுவும் நிறுத்தப்பட்டது. இதனால் மேற்கண்ட, 360 ஏக்கர் நிலத்தில் எந்த பத்திரப்பதிவும் நடத்த முடியாத நிலை உள்ளது.


இதனால் ஸ்ரீரங்கத்தில் வீடு வாங்க, விற்க முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னையை தீர்க்க, 30 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் சட்டப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த, 2011ம் ஆண்டு, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ஜெ., கூட, ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னை தீர்க்கப்படும் என்றார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான ஜெயலலிதா, அடிமனை பிரச்னைக்கு தீர்வு காண குழுவும் அமைத்தார். ஆனால் அதன்பிறகு எந்த தீர்வும் காணப்படவில்லை.


இந்நிலையில், 2021ல் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ஸ்டாலின், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அடிமனை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இன்று திருச்சி, சோமரம் பேட்டையில் நடக்கும், ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., பழனியாண்டி இல்ல விழாவில் பங்கேற்க வரும் முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்தபடி, அடிமனை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பாரா என்று, இதனால் பாதிக்கப்பட்டுள்ள, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். இதே பிரச்னை திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் பகுதியில் குடியிருப்போருக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து சமூக ஆர்வலர் வக்கீல் கி ேஷார் குமார் கூறுகையில், ''50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பிரச்னை நீடித்து வருகிறது. இதற்கு முதல்வர் குழு அமைத்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து கட்சியினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement