எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

36


புதுக்கோட்டை: எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



புதுக்கோட்டையில் நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிராக, திமுக கூட்டணி மனுவில் அவர் (பழனிசாமி) ஏன் இணைந்துள்ளார். அவருக்கு வேறு வேலை ஏதும் இல்லை. அதனால் விமர்சனம் வைக்கிறார். அதை பற்றி நான் கவலைப்படவில்லை.

எங்கள் வேலையை நாங்கள் பார்த்து கொண்டு இருக்கிறோம். எஸ்ஐஆர் குறித்து நீதிமன்றத்திற்கு போய் இருக்கிறோம். நாளைக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதற்கு பிறகு பாருங்கள்.



குற்றச்சாட்டுகள் கூறும் எதிர்க்கட்சிகளுக்கு வேற, வேலை கிடையாது. அதை தான் அவர்கள் செய்து ஆக வேண்டும். எத்தனை முனை போட்டி வந்தாலும், திமுக தலைமையில் இருக்கிற கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும்.
7 வது முறையாக நிச்சயமாக திமுக ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

திட்டங்கள் தொடக்கம்



முன்னதாக ரூ. 767 கோடி மதிப்பிலான திட்டங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் புதுக்கோட்டைக்கு அறிவித்த 6 புதிய அறிவிப்புகள் பின்வருமாறு:

1. அறந்தாங்கி வீரகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கப்படும்.


2. கீரமங்கலம் பகுதி விவசாயிகள் நலன்கருதி காய்கறி குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்


3. வடகாடு ஊராட்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.


4. புதுக்கோட்டை இளைஞர்களுக்கு ஐடி துறையில் வேலை வாய்ப்பு அளிக்க நியோ டைடில் பார்க் அமைக்கப்படும்.



5. கந்தர்வக்கோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்

6. பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

Advertisement