திருவான்மியூரில் டிஜிட்டல் ' சப் ஸ்டேஷன் ' தயார் இ.சி.ஆர்., பகுதிக்கு கூடுதல் மின்சாரம்
சென்னை: சென்னையின் முதலாவது, 230 கிலோ வோல்ட் திறன் உடைய டிஜிட்டல் துணை மின் நிலைய கட்டுமான பணி முடிந்து, மின்சாரம் கையாளும் சோதனை துவங்கியுள்ளது. இது, விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதால், கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில், கூடுதல் மின்சாரம் கையாளப்படும்.
மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், 400 கிலோ வோல்ட், 230 கி.வோ., துணை மின் நிலையங்களுக்கு எடுத்து வரப்பட்டு, உயரழுத்தம் குறைக்கப்படுகிறது.
அவற்றில் இருந்து மின்சாரம் குறைந்த திறன் உடைய துணை மின் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, மின் சாதனங்கள் உதவியுடன், சீராக வினியோகம் செய்யப்படுகிறது.
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில், 400, 230 கி.வோ., துணை மின் நிலையங்கள் அமைக்க, அதிக ஏக்கர் நிலம் கிடைப்பதில்லை. ஒரு துணை மின் நிலையத்தில், கட்டுப்பாட்டு அறை மற்றும் வளாகம் இடம்பெறுகின்றன.
வளாகத்தில் மின்சார அழுத்தத்தை குறைக்கும், 'பவர் டிரான்ஸ்பார்மர்' உள்ளிட்ட சாதனங்களும், கட்டுப்பாட்டு அறையில், அந்த சாதனங்களுக்கான இயக்கம் மற்றும் கண்காணிப்பு கருவிகள் உள்ளன.
சேதம் அதிகம் வளாகம் மற்றும் கட்டுப்பாட்டு அறை, பல நுாறு எண்ணிக்கையிலான கேபிள்களால் இணைக்கப்படுகின்றன. மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால், கேபிள்கள் எரிந்து விடுகின்றன. இதனால், சீரமைப்பு பணிக்கு அதிக செலவு ஆவதுடன், பல நாட்களாகின்றன.
இதை தவிர்க்க, டிஜிட்டல் துணை மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்தது. இதில் வளாகம், கட்டுப்பாட்டு அறை ஆகியவை ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான கேபிள்களில் இணைக்கப்படும். இதனால், குறைந்த இடத்தில் அமைப்பதுடன், சேதமும் அதிகம் ஏற்படாது.
முதல் கட்டமாக, கோவை மாவட்டம், செல்வபுரம், சென்னை திருவான்மியூரில், டிஜிட்டல் துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி, 2018 - 19ல் துவங்கின. கோவையில், 2024 ஜூலை 5ல் செயல்பாட்டிற்கு வந்தது. இதுவே, நாட்டின் முதல் டிஜிட்டல் துணை மின் நிலையம்.
தற்போது, திருவான்மியூர் டிஜிட்டல் துணை மின் நிலையம் கட்டுமான பணி முடிந்து, சோதனை ரீதியாக இயக்கத்திற்கு வந்துள்ளது. அங்கு, 100 எம்.வி.ஏ., எனப்படும் மெகா வோல்ட் ஆம்பியர் திறனில், இரண்டு பவர் டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதனால், 160 மெகா வாட் மின்சாரம் கூடுதலாக கையாளப்படும். அதனால், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளுக்கும், சீராக மின்சாரம் வினியோகம் செய்யப்படும்.
அதிக திறன் இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டிஜிட்டல் துணை மின் நிலையத்தை குறைந்த இடத்தில், அதிக திறன் உடையதாக அமைக்க முடியும். 'காம்பேக்ட்' துணை மின் நிலையம் என்பது, சிறு கன்டெய்னர் போன்று இருக்கும்.
அதில், பிரேக்கர் உள்ளிட்ட கட்டுப்பாடு கருவிகள் இடம்பெறும். அவற்றை, வெளிப்புறத்தில் உள்ள பவர் டிரான்ஸ்பார்மர் உடன் இணைத்து, மின்சாரம் வினியோகிக்கலாம்.
கட்டுப்பாட்டு கருவிகளை வாகனத்தில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். இதை அமைக்க, வழக்கமான துணை மின் நிலையத்தை விட, மூன்று - நான்கு மடங்கு கூடுதல் செலவாகும். திருவான்மியூர் டிஜிட்டல் துணை மின் நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
அதற்கு, தரமணி உட்பட அருகில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் எடுத்து வரப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.