சென்னை நீர்வழித்தடங்களில் அடைப்பு கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பால் பீதி

சென்னை: சென்னை நீர்வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், வடகிழக்கு பருவமழையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. எனவே, இம்மாவட்டங்களில் வெள்ள சேதத்தை தவிர்ப்பதற்காக, பருவமழைக்கு முன்பாக, நீர்வழித்தடங்களை துார்வாரும் பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொள்கின்றனர்.

இதற்காக, நடப்பாண்டு, 30 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த நிதியில், அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு, ஆரணியாறு உள்ளிட்ட நீர்வழித்தடங்களில், ஆங்காங்கே துார் வாரும் பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொண்டனர்.

இதேபோல, அரும்பாக்கம் - விருகம்பாக்கம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணிகளை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.

ஆந்திராவை சமீபத்தில் தாக்கிய புயலுக்கு முன், வெள்ள தடுப்பு பணிகளில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் ஆர்வம் காட்டினர்.

இதனால், முகத்துவாரம் உள்ளிட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டன. ஆந்திராவில் புயல் வீசிய பின், தமிழகத்தில் மழை முற்றிலும் குறைந்தது.

வெயில் தலைகாட்டி வரும் நிலையில், அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், முகத்துவாரங்களில் அடைப்புகளால் நீரோட்டம் குறைவாக உள்ளது.

இதனால், நீர்வழித்தடங்களில் நீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது. இவற்றில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. நீர்வழித்தட கரைகளில் உள்ள செடிகளில் பதுங்கியுள்ள கொசுக்கள், இரவு நேரங்களில் வீடுகள், உணவகங்கள், அலுவலகங்கள் என படையெடுத்து வருகின்றன.

கொசுக்கடியால் பாதிக்கப்படுவோர், டெங்கு, சிக்குன் குனியா, காலரா உள்ளிட்ட தொற்று நோய் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நீர்வளத்துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால், கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement