பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த பெண் டாக்டர்: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

13

புதுடில்லி: ஹரியானாவின் பரிதாபாத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான பெண் டாக்டர் ஷாகீன் ஷாகித், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த தகவல் அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் அந்த அமைப்பை தலைமை ஏற்று நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒயிட் காலர்






கடந்த அக்., 19ம் தேதி காஷ்மீரின் பன்போரா,நவ்காம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் மற்றும் நம் பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுத்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு போஸ்டர்களை ஒட்டியிருந்தது. கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், 'ஒயிட் காலர்' பயங்கரவாத முறைக்கு பயங்கரவாதிகள் மாறியிருக்கும் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.


போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் முஸாமில் கனாயே என்ற முஸாயிப் என்பவனை ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து 2,900 வெடிமருந்து மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.


அவனுடன் தொடர்பில் இருந்த அல் பலா பல்கலையில் விரிவுரையாளராக பணியாற்றிய ஷகீல் மற்றும் பெண் டாக்டர் ஷாகீன் ஷாகித் என்பவளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்நிலையில் பெண் டாக்டர் ஷாகீன் ஷாகித் யார் என்பது குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.



@quote@உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் லால் பாக் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகீன் ஷாகித். இவரது கணவர் யூசுப் அசார். இவர் இந்திய விமானம் ஆப்கனின் காந்தகருக்கு கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்பு உள்ளதும், கடந்த மே மாதம் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. quote

தொடர்பு



பரிதாபாத்தில் கைது செய்யப்பட்டதும் ஷாகீன் ஷாகித் காரில் இருந்து துப்பாக்கி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவரும் ஹரியானாவில் உள்ள அல் பலா பல்கலையில் பணியாற்றி வந்துள்ளார். காஷ்மீர் டாக்டர் முஸாமில் கனாயேவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஷாகீன் ஷாகித்தின் மாருது சுசுகி சுவிப்ட் காரில் தான் துப்பாக்கிகள், பிஸ்டல், வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவரிடம் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகே அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

பயங்கரவாத அமைப்புடன் உள்ள தொடர்பு



ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது பாகிஸ்தானில் வேரூன்றி இருக்கிறது.இந்த அமைப்பு சமீபத்தில் பெண்களையும் இணைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது.இதற்காக, 'ஆன்லைன்' மூலம் பயங்கரவாத பாடம் படிக்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் சகோதரிகள் சாடியா அசார் மற்றும் சமைரா அசார் ஆன்லைன் வகுப்புகளை தினசரி எடுக்க உள்ளனர். பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட 'ஜமாத் உல் - முமினாத்' பயங்கரவாத அமைப்பில் மூளை சலவை செய்து பெண்களை சேர்க்க இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


இந்த 'ஜமாத் உல் - முமினாத்' பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஷாகீன் ஷாகித் ஈடுபட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த பயங்கரவாத அமைப்பின் இந்தியப் பிரிவு தலைவராக ஷாகீன் ஷாகித் செயல்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த தகவல்களை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை



இந்நிலையில் லக்னோவில் வசிக்கும் ஷாகீன் ஷாகித்தின் தந்தை மற்றும் அவரது உறவினர் வீடுகளில் உளவுத்துறையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததுடன், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement