மின் வடத்தில் உரசிய லாரி ரூ.5 லட்சம் 'டயப்பர்' தீக்கிரை
திருவேற்காடு: மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து திருவேற்காடு, வடநுாம்பலில் உள்ள கிடங்கிற்கு , 'டயப்பர்' ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, மின் வடத்தில் உரசி தீப்பற்றியது. இதில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயப்பர்கள் எரிந்து நாசமாகின.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து குழந்தைகள், முதியவர்கள் பயன்படுத்தும், 'டயப்பர்'களை ஏற்றிக்கொண்டு, கன்டெய்னர் லாரி ஒன்று திருவேற்காடு நோக்கி வந்தது. லாரியை, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சமீம், 35, என்பவர் ஓட்டி வந்தார்.
அந்த லாரி, திருவேற்காடு, வடநுாம்பல் பகுதியில் உள்ள மருத்துவ கிடங்கிற்கு, நேற்று அதிகாலை வந்த போது, கன்டெய்னர் லாரியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதனால், சமீம், கன்டெய்னரை திறந்து பார்த்தார். அப்போது, உள்ளே இருந்த 'டயப்பர்'கள் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தன.
தகவலின்படி, பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், லாரியில் இருந்த, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'டயப்பர்' மற்றும் கன்டெய்னர் ஒரு பகுதி முழுதும் தீக்கிரையானது. முதற்கட்ட விசாரணையில், வடநுாம்பல் சாலையில் லாரி வந்த போது, மின் வடத்தில் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.