பாகிஸ்தானில் இதுக்கு மேல் விளையாட முடியாது; அலறும் இலங்கை வீரர்கள்

இஸ்லமாபாத்: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இலங்கை வீரர்கள், உடனடியாக நாடு திரும்ப முடிவு எடுத்துள்ளனர்.


2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், கிரிக்கெட் வீரர்கள் பலத்த காயமடைந்தனர். பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, 10 ஆண்டுகளாக பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்து வந்தது. கடந்த 2019ம் ஆண்டு முதல் தான் பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடந்து வருகின்றன.


அந்த வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது. மேலும், முத்தரப்பு தொடரில் விளையாடவும் திட்டமிட்டிருந்தது. இந்த சூழலில், ராவல் பிண்டி மைதானத்தில் நடந்த முதல்போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இஸ்லமாபாத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.


ராவல்பிண்டி மைதானத்திற்கு அருகே உள்ள இஸ்லமாபாத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், பாகிஸ்தான் - இலங்கை கிரிக்கெட் தொடருக்கான அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது. வெடிகுண்டு தாக்குதலால் பாகிஸ்தான் மண்ணில் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 2வது போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களை காட்டி, இலங்கை வீரர்கள் 8 பேர் தங்களின் சொந்த நாடு திரும்ப உள்ளனர்.


இது குறித்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "பாதுகாப்பு காரணங்களால் நாடு திரும்ப வேண்டும் என்று வீரர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் தயாராக உள்ளனர். திட்டமிட்டபடி, ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறும்.


வீரர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது. தொடரில் இருந்து பாதியில் இருந்து வெளியேற விரும்பும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement