'சிந்திக்க' கற்கும் வன்பொருள்

மூ ளை அறிவியல் துறையிடமிருந்து, செயற்கை நுண்ணறிவுத் துறை ஏராளமான சொற்களைக் கடன் வாங்கியிருக்கிறது. நியூரான்கள், நெட்வொர்க்குகள், சினாப்ஸ்கள் என்று நிறைய சொற்களை எடுத்தாண்டிருந்தாலும், மூளையின் அங்க வடிவங்களை ஏ.ஐ., துறை அதிகம் கண்டுகொள்ளாமலே இருந்தது. இப்போது, தெற்கு கலிபோர்னியா பல்கலை ஆராய்ச்சி யாளர்கள், அசல் மனித மூளையின் நியூரான்களைப் போலவே செயல்படும், செயற்கை நியூரான்களை உருவாக்கியுள்ளனர்.

அவர்களது செயற்கை நியூரான்கள், மின்னணுக்கள், அயனிகள் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி சமிக்ஞைகளை கடத்துகின்றன. மனித நரம்பு செல்கள் எப்படி மின்சாரம் மற்றும் வேதியியல் என இரு முறைகளை பயன்படுத்தி சமிக்ஞைகளை அனுப்புகின்றனவோ, அதேபோல, தெற்கு கலிபோர்னியா விஞ்ஞானிகளின் செயற்கை நியூரான்கள் தகவல் தொடர்பை நிகழ்த்துகின்றன.

தற்போதுள்ள ஏ.ஐ., சில்லுகள் முற்றிலும் எண்மக் கணக்கீட்டை (digital computation) மட்டுமே சார்ந்துள்ளன. ஆனால், இந்தக் கலப்பின 'நியூரான்கள்,' நரம்பு செல்களின் கற்றல் மற்றும் நினைவகத்தின் முக்கிய அம்சங்களான துடிப்பு (spiking), தகவமைப்பு (adaptation) மற்றும் நெகிழ்வுத்தன்மை (plasticity) ஆகியவற்றை பயில்கின்றன. இது கணக்கிடுவதை மட்டும் செய்யாமல், உணரும் தன்மையுடையதுபோலத் தோற்றமளிக்கிறது.

இந்த செயற்கை நியூரான், இன்னும் ஆய்வகத்தைத் தாண்டவில்லை. தற்போதுள்ள சவால் என்னவென்றால், அவற்றின் நுட்பமான அயனி ஓட்டங்களை நிலையாக வைத்திருக்கும் அதே வேளையில், இந்த நியூரான்களின் அளவை அதிகரிப்பதுதான். இந்த கலப்பின நியூரான்கள், மனித மூளை போலவே, வேகமாகவும், சிக்கனமான ஆற்றல் செலவுடனும் தகவல்களை அலசக் கூடிய காலம் வெகு துாரத்தில் இல்லை.

Advertisement