நான் கொடுத்த கிட்னி அசுத்தமா? லாலுவின் மகள் ரோகிணி உருக்கம்

10


பாட்னா: “என் அப்பாவுக்கு என் சிறுநீரகத்தை தானம் கொடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்ய வைத்தேன், இன்று அதே சிறுநீரகம் ஒரு சாபக்கேடு என்று எனக்குச் சொல்லப்படுகிறது," என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா உருக்கமாக தெரிவித்துள்ளார்.


பீஹார் தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் படுதோல்வியை சந்தித்த நிலையில், லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, அரசியலையும், குடும்பத்தையும் விட்டு விலகுகிறேன் என அறிவித்தார். தேர்தல் தோல்வியால், தேஜஸ்வி மற்றும் ரோகிணி இடையே பிரச்னை, வாக்குவாதம் ஏற்பட்டதால் ரோகிணி இந்த முடிவை எடுத்தாக கருதப்பட்டது.

இச்சூழலில் தம்மை கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக ரோகிணி ஆச்சாராயா தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: குடும்பத்தினர் தன்னை அவமதித்தனர். மோசமான வார்த்தைகளால் திட்டினர், ஒரு கட்டத்தில் செருப்பால் அடிக்க அவர்கள் ஓங்கினர்.

உண்மை, சுயமரியாதையை விட்டுக்கொடுக்கவில்லை. அந்த அவமானத்தை தாங்கி கொள்ள வேண்டியிருந்தது. பெற்றோர் லாலு- ராப்ரி மற்றும் சகோதரிகள் அழுது கொண்டிருக்க, கட்டாயப்படுத்தி தாய்வீட்டில் இருந்து பிரித்து விட்டார்கள். என்னை அனாதையாக விட்டுவிட்டார்கள்.

நீங்கள் ஒருபோதும் என்னை போல் தவறு செய்ய கூடாது. ரோகிணியை போல மகள் எந்த குடும்பத்திலும் இருக்க கூடாது. இவ்வாறு ரோகிணி கூறியுள்ளார்.

கிட்னி அசுத்தமா?




மற்றொரு பதிவில், 2022ல் தந்தை லாலு பிரசாத்துக்கு சிறுநீரக தானம் கொடுத்ததை பற்றி மனதை புண்படுத்தும் வகையில் குடும்பத்தினர் பேசியதாக ரோகிணி கூறியுள்ளார்.

அதில், "என்னை அவர்கள் சபித்தனர். கோடிக்கணக்கான பணம் மற்றும் லோக்சபா சீட் வாங்கிக்கொண்டு கிட்னி கொடுத்ததாகவும், அது அசுத்தமான கிட்னி என்று குடும்பத்தினர் திட்டினர்.

திருமணமான அனைத்து மகள்கள், சகோதரிகளுக்கு ஒன்றை சொல்கிறேன். உங்களுக்கு சகோதரன் இருந்தால், நீங்கள் கடவுளாக நினைக்கும் தந்தையை கூட காப்பாற்ற நினைக்காதீர்கள்.

சகோதரன் அல்லது அவருடைய நண்பர்களுடைய கிட்னியை தானம் தரச்சொல்லுங்கள். என் கணவர் மற்றும் குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் சிறுநீரகம் தானம் செய்தது பெரும் பாவம் ஆகிவிட்டது.

நான் கடவுளாக நினைக்கும் அப்பாவை காப்பாற்ற நான் கொடுத்த சிறுநீரகத்தை அசுத்தம் என்கிறார்கள். உங்களில் யாரும் என்னை போல் தவறு செய்துவிடக்கூடாது. இவ்வாறு ரோகிணி ஆச்சார்யா கூறியுள்ளார்.

Advertisement