தெலுங்கானா ஐகோர்ட் இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்

ஹைதராபாத்: தெலுங்கானா ஐகோர்ட் இணையதளத்தை சைபர் கிரிமினல்கள் ஹேக் செய்துள்ளனர். ஐகோர்ட் ஆவணங்கள் அனைத்தும் திருடப்பட்டு விளையாட்டுத்தளத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

ஐகோர்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை, தகவல் தொழில்நுட்ப பதிவாளர் வெங்கடேஸ்வர ராவ், உடனடியாக போலீஸ் டிஜிபிக்கு புகார் அளித்தார். அதில் அவர் கூறி உள்ளதாவது;

உயர்நீதி மன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் tshc.gov.in ஆகும். கோர்ட்டில் இருந்து வழங்கப்படும் வழக்கு பட்டியல்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் பட்டியல்கள், நிர்வாக அறிவிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

இந் நிலையில், ஐகோர்ட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஆவணங்களில் யாரோ அடையாளம் தெரியாத நபர் உள்நுழைந்து, முடக்கி உள்ளார். ஆவணங்களை பார்க்க முனைந்தால், அது நேராக வேறு ஒரு விளையாட்டு இணையதளத்துக்கு இட்டுச் செல்கிறது.

இவ்வாறு அவர் புகாரில் கூறி உள்ளார்.

இந்த புகாரை அடுத்து, எப்ஐஆர் பதிவு செய்து சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement