இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை; கத்தார் பிரதமர் அல் தானியை சந்தித்தார் ஜெய்சங்கர்
தோஹா: தோஹாவில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கத்தார் பிரதமர் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்தார். பிரதமர் மோடியின் வாழ்த்துக்களை ஜெய்சங்கர் தெரிவித்து, இந்தியா-கத்தார் உறவுகளை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
கத்தார் தலைநகர் தோஹாவில், அந்நாட்டு பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியை சந்தித்தார். வர்த்தகம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருநாட்டு தலைவர்கள் விவாதித்தனர்.
இது குறித்து, ஜெய்சங்கர் கூறியதாவது: கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியை தோஹாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி.
எரிசக்தி, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம். மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா, பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தேன். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.