வாரத்திற்கு 72 மணி நேர வேலை செய்யணும்; சீனாவை மேற்கோள் காட்டிய நாராயண மூர்த்தி

47

நமது நிருபர்




இந்தியா வேகமாக வளர இளம் இந்தியர்கள் அதிக நேரம் உழைக்க வேண்டும். வாரத்திற்கு 72 மணி நேர வேலை செய்யுமாறு சீனாவின் 9-9-6 வேலை நேர அட்டவணையை மேற்கோள் காட்டி, இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.


இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலுக்கு, நாராயண மூர்த்தி அளித்த பேட்டி: சீனாவை போல் உற்பத்தி துறையில், நமது நாடு இதே வேகத்தில் முன்னேற வேண்டுமென்றால் இளம் இந்தியர்கள் கடினமாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.


சீனாவில் ஒரு பழமொழி உண்டு, 9, 9, 6. அதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, வாரத்தில் 6 நாட்கள். அது 72 மணி நேர வாரம். இந்திய இளைஞர்கள் இதேபோன்ற வேலை நேரத்தைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு நாராயண மூர்த்தி கூறினார்.

அது சாத்தியம்



உற்பத்தியிலோ அல்லது பிற துறைகளிலோ இந்தியா சீனாவை யதார்த்தமாக முந்த முடியுமா என்ற கேள்விக்கு, ''அது சாத்தியம் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதற்கு தொடர்ச்சியான முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் அது சாத்தியமாகும். இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி சரியான வேகத்தில் தான் செல்கிறது.



தற்போது ஆறு மடங்கு பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவைப் பிடிக்க சமூகத்தின் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பு தேவைப்படும். வேலை எளிதானது அல்ல என்பதை நாம் உணர வேண்டும். இவ்வாறு நாராயண மூர்த்தி பதில் அளித்தார். 9-9-6 சீனாவில் சில நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் பணி நேர அட்டவணை.

பணியாளர்கள் வாரத்திற்கு 6 நாட்கள், காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை வேலை செய்ய வேண்டும் என்பதை தான் 9-9-6 குறிக்கிறது. சீனாவின் அலிபாபா மற்றும் ஹவாய் போன்ற நிறுவனங்களில் இந்த நடைமுறை பிரபலமடைந்தது, குறிப்பிடத்தக்கது.

Advertisement