சேதமடைந்த நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
மப்பேடு: மப்பேடு - சுங்குவார்சத்திரம் மாநில நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆங்காங்கே குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு கிராமம். இங்கிருந்து கீழச்சேரி, பண்ணுார் வழியாக சுங்குவார்சத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இச்சாலை பணி, 130 கோடி ரூபாய் மதிப்பில், 2022 ஜூனில் துவங்கி, 2023ம் ஆண்டு நவம்பரில் நிறைவடைந்தது.
இச்சாலை வழியாக, தினமும் 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது, ஆங்காங்கே சாலை சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த மாநில நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.