ஹசீனாவுக்கு எதிரான தண்டனை: அரசியல் குழப்பத்தில் வங்கதேசம்!
நம் அண்டை நாடானா வங்கதேசத்தில், இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலையில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தற்போது அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பவருமான ஷேக் ஹசீனாவுக்கு, அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், தற்போது வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் இடைக்கால அரசு அமைத்த தீர்ப்பாயம் தான், 'மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்தவர் ஷேக் ஹசீனா' என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று, இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
'தேர்ந்தெடுக்கப்படாத அரசு அமைத்த மோசடி தீர்ப்பாயம் தான், மரண தண்டனை வழங்கியுள்ளது. அதை ஏற்க முடியாது' என, ஹசீனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேநேரத்தில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசோ, இந்த தீர்ப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனக்கூறி வரவேற்று உள்ளது. அதேபோல, ஹசீனாவுக்கு எதிரான வங்கதேச தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகளும் தீர்ப்பை வரவேற்றுள்ளன.
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில், சர்வதேச நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் இடம்பெற வேண்டும். ஆனால், ஹசீனாவுக்கு தண்டனை விதித்த தீர்ப்பாயத்தில், வங்கதேச நாட்டின் நீதிபதிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அத்துடன், அவருக்கு எதிராக வாதிட நியமிக்கப்பட்ட வழக்கறிஞரும், இடைக்கால அரசால் நியமிக்கப்பட்டவரே. இதனால் தான், தீர்ப்பை ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் எதிர்க்கின்றனர்.
வங்கதேசத்தில் தற்போது பழிவாங்கும் அரசியல் கலாசாரம் தலைதுாக்கி உள்ளது. அந்தக் கலாசாரம் உருவாக காரணமானவர்களில் ஹசீனாவும் ஒருவர். இந்த விஷயத்தில் அவரும் தன் பங்கை மறுக்க முடியாது.
இஸ்லாமிய பழமைவாதம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை போன்றவை அரசியல் கலாசாரத்தில் சேர்ந்துள்ளதால், வங்கதேசத்தின் அரசியல் சூழல் இப்போது மிகவும் கொடூரமாக மாறியள்ளது. ஹசீனா அந்தக் கலாசாரத்திற்கு பலிகடா ஆகிவிட்டார்.
மேலும், வங்கதேசத்தில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்ட பின், அங்கு சுதந்திரமான மற்றும் நேர்மையான வகையில் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றே நம்பப்படுகிறது. அதேநேரத்தில், ஹசீனாவின் அவாமி லீக், வங்கதேசத்தில் இன்றும் ஒரு பலமான கட்சியாகவே உள்ளது.
ஹசீனாவிற்கு எதிரான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களுக்கும், பேரணிகளுக்கும் அக்கட்சி அழைப்பு விடுத்திருந்ததில் இருந்தே அதன் செல்வாக்கை உணரலாம்.
இந்த தீர்ப்பிற்கு பின், 'ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்' என்ற கோரிக்கையை, அந் நாட்டின் இடைக்கால அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது. 'மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட ஒருவருக்கு, எந்த நாடும் அடைக்கலம் தரக்கூடாது. அப்படி தருவது, அண்டை நாடுகள் இடையேயான நட்பையும், நீதியையும் அவமதிக்கும் செயல்' என்று, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்துள்ளது.
ஆனாலும், இந்திய அரசு எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை; இந்த விஷயத்தில் ராஜதந்திர ரீதியாகவே செயல்படும் என்றும் நம்பலாம். ஏனெனில், ஹசீனா பல ஆண்டுகளாக, இந்திய அரசுடன் நட்பு பாராட்டி வருபவர். எனவே, அவரை விட்டுக் கொடுக்காது என்றே தெரிகிறது.
ஹசீனா, வங்கதேசத்தை விட்டு வெளியேறிய பின் ஏற்பட்ட இஸ்லாமிய அரசியலின் எழுச்சி, அந்நாட்டில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அத்துடன், வேலையின்மை, ஊழல் மற்றும் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியும் மேலோங்கியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் அடிக்கடி நிகழும் வன்முறை சம்பவங்கள், யூனுஸ் ஆட்சியின் அதிகாரம் குறைந்து வருவதை பிரதிபலிக்கின்றன.
வங்கதேசத்தில் ஜனநாயக ரீதியான செயல்பாடுகளும், நடைமுறைகளும் நாளுக்கு நாள் தேய்ந்து வருகின்றன. இந்தச் சூழலில், ஹசீனாவுக்கு எதிரான தண்டனை அறிவிப்பால், அந்நாட்டின் அரசியல் நிலைமை மேலும் மோசமடையும்; குழப்பங்கள் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
மேலும்
-
ரயிலில் கஞ்சா கடத்திய பொள்ளாச்சி வாலிபர்கள் கைது
-
தாய் இறந்த துக்கம் தாளாமல் பிளஸ் 1 மாணவர் தற்கொலை
-
ராமாபுரத்தில் பராமரிப்பற்ற பூங்கா மேய்ச்சல் இடமாக மாறிய அவலம்
-
பயங்கரவாத டாக்டர்களிடம் வாடகை பாக்கியை வாங்கி தரும்படி போலீசிடம் கெஞ்சிய மத போதகர்
-
கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்க முடிவு வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்க முடிவு
-
7வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்