ஒரு ஆண்டுக்கு மேல் நீண்ட துாரம் பயணிக்கும் பயணிகள் விசைப்படகு

மேட்டூர்:மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு ஆண்டுக்கு மேல், 100 அடிக்கு மேல் நீடிப்பதால்
பண்ணவாடி - நாகமறை பயணிகள் விசைப்படகு நீர்பரப்பு பகுதியில் நீண்ட துாரம் பயணிக்கிறது.


சேலம் மாவட்டம், கொளத்துார் ஒன்றியம், பண்ணவாடி பரிசல்துறையில் இருந்து மேட்டூர் அணை மறுகரையில் உள்ள தர்மபுரி மாவட்டம், நாகமறைக்கு, 2.5 கி.மீ., துாரம் கொண்ட நீர்பரப்பு பகுதியில் பயணிகள் விசைப்படகு இயக்கப்படுகிறது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. அணை முழு கொள்ளளவில் நீடிக்கும் பட்சத்தில் பண்ணவாடியில் இருந்து நாகமறைக்கு நீர்பரப்பு பகுதியில், 2.5 கி.மீ., துாரம் பயணிகள் விசைப்படகு இயக்கப்படும்.


அணை நீர்மட்டம் குறையும் போது இயக்கப்படும் விசைப்படகு துாரமும் அதற்கேற்ப படிப்படியாக குறையும்.நீர்மட்டம், 50 அடிக்கு கீழே குறையும் போது விசைப்படகு நீர்பரப்பு பகுதியில் அரை கி.மீ., துாரம் மட்டுமே இயக்கப்பட்டு மறுகரைக்கு சென்று விடும். கடந்த ஆண்டு அக்.22ல், 98.56 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், அக். 23ல், 100 அடியாக உயர்ந்தது.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் தொடர்ந்து, 13 மாதங்களாக மேட்டூர் அணை நீர்மட்டம், 100 அடிக்கு மேல் நீடிக்கிறது. இதனால், நாகமறையில் இருந்து ஒரு ஆண்டுக்கு மேலாக பயணிகளை ஏற்றி கொண்டு விசைப்படகு, 2.25 கி.மீ., துாரம் இயக்கப்பட்டு நீர்பரப்பு பகுதியின் மறுகரையில் உள்ள பண்ணவாடி பரிசல் துறைக்கு செல்கிறது.


ஒரு நாளுக்கு, 5 முறை விசைப்படகு ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு இயக்கப்படுகிறது. அதற்காக விசைப்படகில் செல்லும் பயணிகளிடம், 20 ரூபாய், டூவீலர்களுடன் செல்வோரிடம், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Advertisement