அமெரிக்கா செல்வதற்கான விசா நிராகரிப்பு; பெண் டாக்டர் விபரீத முடிவு

ஹைதராபாத்: அமெரிக்கா செல்வதற்கான விசா நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலில், ஆந்திராவைச் சேர்ந்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் டாக்டர் ரோகினி,38. இவர் அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்துள்ளார்.


இந்த நிலையில், அமெரிக்கா செல்வதற்கான விசா வேண்டி விண்ணப்பித்து காத்திருந்துள்ளார். ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், பெரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். தன்னுடைய ஆசை நிறைவேறாமல் போன விரக்தியில் கடந்த 22ம் தேதி தனது வீட்டில் ரோகினி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது செல்போனை பெற்றோர்கள் தொடர்பு கொண்ட நிலையில், எந்த பதிலும் அளிக்காத காரணத்தால், மறுநாள் நேரில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீடு பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ரோகினி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.


இது குறித்து சிலகல்குடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மகளின் விபரீத முடிவு குறித்து அவரது தாயார் கூறுகையில், "என்னுடைய மகள் ரோகினி கடந்த 2010ம் ஆண்டு கிர்கிஸ்தானில் எம்பிபிஎஸ் படித்து முடித்தார். அவருக்கு அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்று ஆசை. அங்கு தான் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறுவார். நாங்கள் இந்தியாவிலேயே பணியாற்றுமாறு வற்புறுத்தி வந்தோம். ஆனால், அதனை அவர் கேட்கவில்லை. கடந்த சில தினங்களாக விசாவுக்காக காத்திருந்தார். ஆனால், அது நிராகரிக்கப்பட்ட நிலையில் மனஉளைச்சலில் இருந்து வந்தார்," எனக் கூறினார்.

Advertisement